உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்துக்கு இலங்கை ஷாக்... அரையிறுதிக்கு முன்னேறுமா?
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஷாக் கொடுத்த இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறிய இலங்கை அணி, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பில் மயிரிழையில் நீடிக்கிறது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் அரையிறுதிக்கு முன்னேறப் போகும் அணிகள் எவை? என்ற பெரும் எதிர்பார்ப்பில் கூட்டல், கழித்தல் கணக்குகளை ரசிகர்கள் போட ஆரம்பித்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா ஆகிய 4 அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. ஆனால் இலங்கை, வங்கதேசம், வெ.இண்டீஸ் அணிகளும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய ஓரளவுக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் அந்த அணிகளும் முட்டி மோதப் பார்க்கின்றன. தெ.ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு மட்டுமே அரையிறுதி வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்தை எதிர்கொண்டது இலங்கை அணி . இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்தின் வேகத்துக்கு ஈடு . கொடுக்க முடியாமல் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி, தட்டுத் தடுமாறி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ் மட்டுமே அதிக பட்சமாக 85 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணிக்கு, இலங்கை அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா தொல்லையாக அமைந்தார். இவரது வேகத்தில் பேர்ஸ் டோவ், ஜேம்ஸ் வின்ஸ், ஜோ ரூட் ஆகியோரை பெவிலியன் அனுப்ப, இங்கிலாந்து அணி ஆட்டம் கண்டது. சுழலில் இலங்கை அணியின் தனஞ்செயா மாயாஜாலம் காட்டி 3 விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து அணி சரிந்தது. இதனால் 47 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல் அவுட்டான இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே போராடி 82 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். இலங்கை அணியின் வெற்றிக்கு மலிங்காவின் அபார பந்துவீச்சே காரணமாக அமைந்தது.
இந்த வெற்றியின் மூலம் இது வரை ஆடிய 6 போட்டிகளில் 2-ல் வெற்றி, 2-ல் தோல்வி, இரு ஆட்டங்கள் மழையால் ர்த்து என 6 புள்ளிகள் பெற்றுள்ள இலங்கை புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியது.அத்துடன் எஞ்சிய 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் இலங்கை தக்கவைத்துக் கொண்டது.
இந்தத் தொடரில் தற்போது வரை நடந்த ஆட்டங்கள் படி ஆஸ்திரேலியா 6 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி, ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து 5 போட்டியில் 4-ல் வென்றும், ஒரு போட்டி மழையால் ரத்தானதாலும் 9 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 6 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றும் 2-ல் தோற்றும் 8 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி 3-ல் வெற்றி பெற்றும், ஒரு போட்டி மழையால் ரத்தானதாலும் 7 புள்ளிகள் பெற்று 4 - வது இடத்தில் நீடிக்கிறது. இன்று ஆப்கானை எளிதில் வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளதால் புள்ளிப் பட்டியலில் மேலும் முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோசமான பீல்டிங்.. நியூசி.யிடம் கோட்டை விட்ட தெ.ஆப்ரிக்கா... அரையிறுதி வாய்ப்பும் 'அம்பேல்'