காதலர்களுக்கு உதவிய வழக்கறிஞர் கடத்தல்! - பொதுமக்கள் போராட்டத்தால் விடுவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காதலர்களுக்கு உதவியதாக வழக்கறிஞர் கடத்தப்பட்டத்தை அடுத்து பொதுமக்களின் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வெள்ளாகுளம் பகுதியை சேர்ந்த ஆக்கின்ரூபன் அருள் (26) என்பவரும், ஆலங்காடு பகுதியை சேர்ந்த கோப்பெருந்தேவி (23) ஆகிய இருவரும் காதலித்துள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு இரு வீட்டாருமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையறிந்த, கோப்பெருந்தேவியின் உறவினர்கள் சில தினங்களுக்கு முன் காதலர்களை திருச்சியில் கண்டுபிடித்து கடுமையாகத் தாக்கி இருவரும் பிரிந்து விடுமாறு மிரட்டியுள்ளனர்.

இது பற்றி அறிந்த திருச்சி மகளிர் போலீசார் இருவரையும் மீட்டுள்ளனர். பின்னர், இரு வீட்டாரையும் அழைத்து, மேஜரான இருவரும் சுய விருப்பத்தின் அடிப்படையில் திருமணம் செய்துள்ளனர். அவர்களுக்கு யாரும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், காதலர்களுக்கு உதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கே.ராசியமங்கலத்தை சேர்ந்த வக்கீல் மிராண்டா (37) என்பவரை நேற்று முன் இரவு சிலர் கடத்திச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த மிராண்டாவின் ஊரைச் சேர்ந்தவர்கள் வடகாடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

மேலும், சனிக்கிழமையன்று காலை 8 மணியளவில் கே.ராசியமங்கலத்தை சேர்ந்த வக்கீல் மிராண்டாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில், ஆலங்குடி டி.எஸ்.பி., அப்துல் முத்தலீப் போராட்ட இடத்திற்குச் சென்று மாலைக்குள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. கடத்தப்பட்ட வழக்கறிஞரும் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

More News >>