காலை கடனை கழிப்பதில் கஷ்டமா? இப்படி செய்யுங்க

'இது ஒரு பிரச்னையா?' என்று சிலர் எண்ணலாம். அது பற்றிய பேச்சே பலருக்கு சிரிப்பை வரவைக்கலாம். உண்மையில் இந்த பிரச்னையால் சிரமத்திற்கு உள்ளாவோர் அநேகர். மலங்கழிப்பது பலருக்கு பெரிய சவாலாக மாறி விட்ட காலகட்டம் இது. வாழ்க்கை முறை மாற்றத்தால் நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, உடலுழைப்போ, உடற்பயிற்சியோ இல்லாமல் போவது, வேறு நோய்களுக்கு சாப்பிடும் மருந்தின் பக்கவிளைவு, செரிமான கோளாறு ஆகியவற்றால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

மலச்சிக்கலை தீர்ப்பதற்கு கையாளக்கூடிய சில எளிய வழிமுறைகள்:

உடற்பயிற்சி:

உடற்பயிற்சி செய்யவில்லையென்றால் செரிமானம் சரியாக நடக்காது. மலச்சிக்கலை தீர்ப்பதற்கு நடைப்பயிற்சி (walking) அவசியம். நீங்கள் சாப்பிட்டு குறைந்தது ஒரு மணி நேரமாவது கடந்த பின்னர் நடைப்பயிற்சி செல்வது நல்லது. தினமும் இருபது நிமிட நேரமாவது நடப்பது, மலச்சிக்கலை தீர்க்க உதவும்.

தண்ணீர்:

நீர் அருந்துவது உடலுக்கு நீர்ச்சத்தை மட்டும் அளிப்பதோடு நின்றுவிடுவதில்லை. நம் செரிமான மண்டலத்தில் உணவு எளிதாக பயணிக்கவும் உதவுகிறது. நீர் குறையும்போது செரிமான பாதையில் தடை ஏற்பட்டு மலச்சிக்கலுக்கு காரணமாகிறது. தினமும் குறைந்தது 8 முதல் 10 குவளை (தம்ளர்) நீர் அருந்துவது அவசியம்.

நீர் அருந்துவதற்கு பதிலாக சோடா போன்ற பானங்கள், செயற்கை பானங்கள் அருந்துவதை தவிர்க்கவேண்டும். மது மற்றும் காஃபி போன்றவையும் உடலிலுள்ள நீர்ச்சத்தை குறைத்து மலச்சிக்க ஏற்பட காரணமாகும். அவை எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு, நீர் மட்டும் அருந்துங்கள்.

நார்ச்சத்து உணவு:

மலச்சிக்கலை தீர்ப்பதற்கு முக்கியமானது நார்ச்சத்து மிக்க உணவு பொருள்களை சாப்பிடுவது ஆகும். ஓட்ஸ் மற்றும் தானியங்களை காலையில் உண்பது பலனளிக்கும். தினசரி உணவில் காய்கறி அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள். தினமும் பழங்கள் சாப்பிடுவதை வழக்கப்படுத்துங்கள்; மலங்கழிப்பதும் வழக்கமாகிவிடும்.

வழக்கம்

உடல் ஓர் ஒழுங்குக்கு உட்பட்டது. தினசரி நாம் எதை செய்கிறோமா அதற்கு உடல் பழகிவிடும். இதில் தடை ஏற்படும்போது மலச்சிக்கல் உருவாகலாம். தினமும் கழிப்பறைக்கு செல்லும் நேரத்தை ஒரே ஒழுங்காக கடைபிடியுங்கள். விரைவில் பழகிவிடும்.

கழிப்பறை:

கழிப்பறையில் நீங்கள் அமரும் விதம்கூட மலங்கழிப்பதில் வேறுபாட்டை உணரச் செய்யும். மலம் வெளியேறுவது சிரமமாக இருந்தால், பாதங்கள் உடல் முழுவதையும் தாங்குவதுபோல் குந்தி அமரவேண்டும் (squatting position). இந்திய முறை என்று பொதுவாக கூறப்படும் கழிப்பறைகள் நன்று. மேலைநாட்டு பாணி கழிப்பறை என்றால், முன்புறம் ஒரு நாற்காலி போன்ற ஆசனத்தை (stool) போட்டு கால்களை அதன்மேலே வைத்து அமரலாம். இது எளிதாக மலங்கழிய உதவும்.

மலமிளக்கிகளை (laxative) பயன்படுத்துவதில் கவனம் தேவை. தொடர்ந்து மலமிளக்கிகளை பயன்படுத்துவது உடலில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்துகள் சேர்வதை தடுக்கும். ஆகவே, மருத்துவரின் ஆலோசனையின்றி மலமிளக்கிகளை பயன்படுத்தவேண்டாம்.

இளைஞர்களையும் பாதிக்கும் ஆர்த்ரைடிஸ்
More News >>