யூடியூப்: கமெண்ட் பகுதியில் சோதனை முயற்சி
பயனர்கள் கருத்து தெரிவிக்க விரும்பி சொடுக்கினால் மட்டுமே கமெண்ட் (Comments) பகுதி திறப்பதுபோன்ற திருத்தத்தை யூடியூப் தன் வடிவமைப்பில் சோதனையடிப்படையில் கொடுத்துள்ளது.
யூடியூப் என்னும் ஒளிக்கோவை பகிர்வு சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட வீடியோவுக்கு கீழாக 'அடுத்து வருபவை' (Up next) என்ற பகுதிக்குக் கீழாக 'கருத்து பகிர்வு' என்னும் கமெண்ட் பகுதி இருக்கிறது. வீடியோவை பார்ப்பவர்கள், அதற்குக் கீழாக ஏனைய பயனர்கள் எழுதிய கருத்துகளையும் ஒருசேர படிக்க முடியும்.
தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதள செயலியில் சோதனையடிப்படையில் சில பயனர்கள் மட்டும் பார்க்கும்படியாக வடிவமைப்பு மாற்றம் ஒன்றை யூடியூப் நிறுவனம் செய்துள்ளது. அதன்படி, வீடியோவுக்கு கீழாக 'விரும்புகிறேன்' (Like), 'விரும்பவில்லை' (Dislike), 'பகிர்தல்' (Share) ஆகிய பொத்தான்களுக்கு அருகிலேயே 'கருத்துகள்' (Comments) என்ற பொத்தானும் அமைக்கப்பட்டுள்ளது.
பயனர் ஒருவர் வீடியோவை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பினால் அல்லது மற்றவர்களின் கருத்துகளை வாசிக்க விரும்பினால் Comments பொத்தானை சொடுக்க (click) வேண்டும்.
தேவையற்ற, அவதூறான மற்றும் ஆட்சேபிக்க தக்க வாசகங்களை கருத்து பகிரும் பகுதியில் பலர் எழுதி வைப்பதை தவிர்ப்பதற்காக யூடியூப் இம்முயற்சியில் ஈடுபடலாம் என்று கருதப்படுகிறது.
தற்போது இந்தியாவில் யூடியூப் ஆண்ட்ராய்டு செயலியில் மட்டுமே இந்த வடிவமைப்பு மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஐஓஎஸ் இயங்குதளம் மற்றும் இணையம் மூலமான பயன்பாடுகளில் இம்மாற்றம் எப்போது செய்யப்படும் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.
மொத்த யூடியூபர் ரசிகர்களையும் கவர்ந்த இன்டெர்நெட் பசங்க!