உலகக் கோப்பை கிரிக்கெட் ஆப்கன் பந்து வீச்சில் சொதப்பல் - இந்தியா 224/8
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா ரன் குவிக்க திணறி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி சவுத்தாம்டனில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தத் தொடரில் தான் ஆடிய 5 போட்டிகளிலுமே மோசமான தோல்வியைத் தழுவிய ஆப்கனை, இந்திய வீரர்கள் அடித்து நொறுக்கி அபாரமாக ரன் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்ததோ எதிர்மாறாக அமைந்து விட்டது. துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் ஆப்கன் வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தட்டுத்தடுமாறினர்.
இந்தத் தொடரில் 2 சதமடித்து சாதித்திருந்த ரோகித் சர்மா 10 பந்துகளை சந்தித்து ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்து கேப்டன் கோஹ்லி, ராகுலுடன் சேர்ந்து ஓரளவுக்கு அதிரடி காட்ட, 53 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் சேர்த்திருந்த ராகுல் அவுட்டானார். அடுத்து வந்த தமிழக வீரர் விஜய் சங்கரும் ரன் எடுக்க சிரமப்பட்டு 41 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
தொடர்ந்து வந்த அனுபவ தோனியும் ரன் எடுக்க முடியாமல் தடவிக் கொண்டே இருக்க மறுமுனையில் 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் கோஹ்லியும் அவுட்டானார்.
பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் ஆப்கன் வீரர்கள் அபார திறமையை வெளிப்படுத்தியதால் கடைசி வரை இந்திய வீரர்கள் ரன்களை குவிக்க முடியவில்லை. கோனி 28 ரன்களிலும், கேதார் ஜாதவ் ஓரளவு வுக்கு நிதானித்து ஆடி 68 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் பாண்ட்யா (7), ஷமி (1) அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 50 ஓவர் முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதனால் 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் ஆடி வருகிறது. இந்திய பந்து வீச்சாளர்களாவது தங்கள் திறமையை வெளிப்படுத்தி அணியை தோல்வியிலிருந்து மீட்பார்களா? என்ற பெரும் எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.