திட்டமிட்டபடி நாளை நடிகர் சங்கத் தேர்தல்... பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

திட்டமிட்டபடி நாளை நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது. மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெறும் தேர்தலுக்கு போதிய பாதுகாப்பு வழங்க சென்னை போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்ய ஜுன் 23-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் மேற்பார்வையில் இந்தத் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் மீண்டும் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தனர். திடீரென பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி என்ற பெயரில் ஒரு அணியினர் களத்தில் குதிக்க , நடிகர் சங்கத் தேர்தலில் விறுவிறுப்பு கூடியது.

இதற்கிடையே இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே சர்ச்சைகளும் சுழன்றடித்தன. ஒரு பக்கம் சங்க உறுப்பினர்கள் 61 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோதமாக நீக்கி விட்டதாகக் கூறி புகார் கூறப்பட்டது. மற்றொரு பக்கம் தேர்தல் நடைபெறுவதாக இருந்த எம்.ஜி.ஆர்.- ஜானகி கல்லூரிக்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் மறுத்தது.

இதனால் உயர்நீதிமன்றத்தில் விஷால் தரப்பினர் முறையீடு செய்தனர். விடாப்பிடியாக போலீஸ் தரப்பில் பிடிவாதம் பிடித்ததால் எம்.ஜி.ஆர்.- ஜானகி கல்லூரிக்குப் பதிலாக வேறு இடத்தில் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நீக்கப்பட்ட சங்க உறுப்பினர்களின் புகாரில் தேர்தலை நடத்த தடை விதித்து மாவட்ட பதிவாளர் கடந்த 4 நாட்களுக்கு முன் திடீரென உத்தரவிட்டார்.

இதனால் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுவது சந்தேகமான நிலையில், விஷால் தரப்பினர் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் முறையிட, ஒரு வழியாக திட்டமிட்டபடி நாளை தேர்தலை நடத்த அனுமதி வழங்கியது. தேர்தல் முடிவுகளை மட்டும் வெளியிடக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நாளை நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது.

மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும், அதற்கு போதிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலரான ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்துள்ளார்.

இதனால் பரபரப்பான சூழலில் நாளை தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது.

More News >>