இது நடந்திருக்கவே கூடாது நடிகர் சங்கம் மீது ரஜினி கோபம்

நான் எவ்வளவோ முயற்சித்தும் தபால் வாக்குச் சீட்டு தனக்கு தாமதமாகவே கிடைத்தது. இப்படி நடந்திருக்கவே கூடாது என்று ரஜினிகாந்த், நடிகர் சங்கத்தின் மீது கோபத்தைக் காட்டியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ம் தேதியன்று எம்.ஜி.ஆர்-ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 

விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் களத்தில் இறங்கின. ஆனால், அடுத்தடுத்த திருப்பங்களால் தேர்தலே நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. கடைசியாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஜூன் 22ம் தேதி மாலையில்தான் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி இன்று (23ம் தேதி) மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

இதற்கிடையே, தான் எவ்வளவோ முயற்சித்தும் தபால் வாக்கு தனக்கு தாமதமாக கிடைத்ததாக ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘நான் தற்போது மும்பையில் சூட்டிங்கில் இருக்கிறேன். நடிகர் சங்கத் தேர்தலில், தபால் வாக்குச்சீட்டைப் பெற நான் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும், மாலை 6.45 மணிக்குத்தான் எனக்கு அது கிடைத்தது. சீக்கிரமாக பெற நான் முயற்சித்தும் வாக்குச்சீட்டு தாமதமாக கிடைத்ததால், தாமதத்தின் காரணமாக நான் வாக்களிக்க இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். இது மோசமானது மற்றும் துரதிருஷ்டவசமானது. இது நடந்திருக்கவே கூடாது.

இவ்வாறு ரஜினி கூறியுள்ளார். இது பற்றி, நடிகர் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘தேர்தல் எவ்வளவு இழுபறிக்குப் பின்பு நடைபெறுகிறது என்பது ரஜினிக்கு நன்கு தெரியும். எனவே, அவர் சங்கத்தின் மீது குறை கூறுவது முறையல்ல. அவருக்கு உண்மையில் அக்கறை இருந்திருந்தால் நிச்சயம் அவர் வாக்களிக்க முடியும்’’ என்றார்.

More News >>