நடிகர் சங்கத் தேர்தலிலும் கள்ள ஓட்டு.... மைக் மோகன் ஓட்டை போட்டது யாரோ?
சென்னையில் இன்று நடை பெற்று வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலிலும் கள்ள ஓட்டுப் புகார் எழுந்து பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் மைக் மோகனின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டாக போட்டு விட்டுச் செல்ல, உண்மையான தனது ஓட்டைப் போட முடியாமல் மைக் மோகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது முதலே பல்வேறு சர்ச்சைகள் வெடித்ததால் தேர்தல் நடக்குமா?நடக்காதா? என்ற கேள்விகள் எழுந்தது. ஒரு கட்டத்தில் சங்க உறுப்ப பினர்களின் வாக்காளர் பட்டியலில் குளறுபடி என்ற புகாரில் தேர்தலை நடத்தக் கூடாது என சங்கங்களின் பதிவாளர் தடை போட்டார். கடைசியில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் திட்டமிட்டபடி இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் தலைமையிலான போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பிரபல மற்றும் முன்னாள், இந்நாள் நடிகர், நடிகைகள் காலை முதலே வந்து ஆர்வமுடன் ஓட்டளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தலிலும் கள்ள ஓட்டுப் புகார் எழுந்து காலையிலேயே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.காலை 9.30 மணி அளவில் தேர்தலில் வாக்களிப்பதற்காக மூத்த நடிகரான மைக் மோகன் வந்தார். ஆனால் அவரது பெயரில் உள்ள ஓட்டை வேறு யாரோ முன்னதாகவே போட்டுவிட்டு சென்றது அப்போதுதான் தெரிய வந்தது. இதனால் வாக்குப்பதிவு அதிகாரிகள் மைக் மோகனிடம், உங்கள் ஓட்டு பதிவாகி விட்டதே என்று கூற மைக் மோகன் டென்ஷனாகி, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். இதனால் வாக்குப் பதிவின் போது சிறிது சலசலப்பு ஏற்பட்டு பரபரப்பானது. 1980-களில் கோகிலா,பயணங்கள் முடிவதில்லை, விதி என பல படங்களில் கதாநாயகனாக நடித்த மோகன், அப்போது திரையுலகில் பிரபலமாக இருந்தவர். பெரும்பாலான படங்களில் மைக் பிடித்து பாடும் காட்சிகளில் நடித்து அசத்தியதால் இவருக்கு மைக் மோகன் என்ற பட்டம் ஒட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.