அல்வா நாடகத்தின் பெயர் மாற்றம்... இடமும் திடீர் மாற்றம்... எஸ்.வி.சேகர் காமெடி

நடிகர் சங்கத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏட்டிக்குப் போட்டியாக 'அல்வா' என்ற தலைப்பில் நாடகம் போடப் போவதாக அறிவித்திருந்த நடிகர் எஸ்.வி.சேகர், இப்போது நாடகத்தின் தலைப்பை மாற்றியுள்ளார். அத்துடன் நாடகம் நடைபெறும் இடத்தையும் வேறு இடத்திற்கு மாற்றி காமெடி செய்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக இருந்த விஷால் தரப்பினருக்கும், நடிகர் எஸ்.வி.சேகருக்கும் இடையே முட்டல் மோதலாகி ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தனர். தற்போது நடைபெறும் சங்கத் தேர்தலுக்கும் எஸ்.வி.சேகர் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தப் பார்த்தார்.

எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரியில் 23-ந்தேதி தேர்தல் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரியில், தனது 'அல்வா' நாடகத்தை நடத்தப் போவதாக எஸ்.வி.சேகர் விளம்பரப்படுத்தினார். இதற்கு முறையான அனுமதி பெற்றுள்ளதாகவும், நடிகர் சங்கத் தேர்தல் நடத்துவதற்கு விஷால் தரப்பினர் அனுமதியே பெறவில்லை. அனுமதி பெற்றிருந்தால் ரசீது காட்டச் சொல்லுங்கள் என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், உயர் நீதிமன்றமும் வேறு இடத்தை தேர்வு செய்து தேர்தலை நடத்த அறிவுறுத்த, மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. நடிகர், நடிகர்கள் பலரும் காலை முதலே உற்சாகமாக வாக்களித்து வருவதால், தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே இன்று நடைபெறவிருக்கும் தனது 'அல்வா' நாடகத்தின் பெயரை ‘காமெடி தர்பார்’ என நடிகர் எஸ்.வி. சேகர் மாற்றியுள்ளார். நாடகம் நடைபெறும் இடத்தையும் எம்.ஜி.ஆர் - ஜானகி கல்லூரியில் இருந்து தியாகராஜர் அரங்கத்திற்கு மாற்றியுள்ளதாகவும் எஸ்.வி.சேகர் அறிவித்துள்ளார்.

இது குறித்து எஸ்.வி. சேகரிடம், ஏன் இந்த திடீர் முடிவு? நாடகத்தின் தலைப்பை ஏன் மாற்றினீர்கள்? என கேட்ட்டதற்கு, நடிகர் சங்கத் தேர்தலே ஒரு காமெடி தர்பார் போல நடக்கிறது, அதனால் மாற்றினேன் எனக் கூறி தமாஷ் செய்தார். இடத்தையும் ஏன் மாற்றினீர்கள்? என்றதற்கு, அவர்கள் தேர்தல் நடைபெறும் இடத்தை மாற்றினார்கள். அதனால் நாடகம் நடைபெறும் இடத்தை நானும் மாற்றினேன் எனக் காமெடியாக கூறி தானும் காமெடி நடிகன் என்பதை நிரூபிப்பது போல் பதிலளித்தார்.

More News >>