60 வருஷமா சென்னையில குடியிருக்கேன்..! நான் அப்படிச் சொல்வேனா?- துரைமுருகன் பல்டி
சென்னையில் நிலவும் வரலாறு காணாத குடிநீர் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு காண தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தினமும் ஒரு கோடி லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று வேலூரில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய துரைமுருகன், ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு சென்றால் போராட்டம் வெடிக்கும் என்ற ரீதியில் பேசியது பெரும் சர்ச்சையாகி விட்டது. தமிழ்நாட்டுக்குள்ளேயே, தமிழர்களின் தவித்த வாய்க்கு தண்ணீரை கொண்டு செல்ல எதிர்ப்பு காட்டினால், பிற மாநிலங்களிடம் தண்ணீர் எப்படி கேட்க முடியும். பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவர் இப்படி பேசலாமா? என பல்வேறு தரப்பிலும் கண்டனக் குரல் எழ, நான் எப்படி பேசவேயில்லை என பல்டி அடித்துள்ளார் துரைமுருகன்.
இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூரில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், காவிரி தண்ணீரை வழிமறித்து ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு கொண்டுபோவது நியாமில்லை என்றும், ஜோலார்பேட்டையைத் தவிர வேறு எங்காவது தண்ணீர் கிடைத்தால், அதை கொண்டு போவதில் ஆட்சேபனை இல்லை என்று தான் பேசினேன்.
வேலூர் மாவட்டத்திலேயே வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே பற்றாக்குறையுடன் கிடைக்கும் காவிரி தண்ணீரை மறித்து சென்னைக்கு கொண்டு சென்றால், வேலூர் மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனத்தான் கூறினேன்.
எனது இந்த பேச்சை, ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல துரைமுருகன் எதிர்ப்பு என தவறாக சிலர் பிரச்சாரம் செய்கின்றனர். சென்னையில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் எனக்கு,அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாதவன் அல்ல. தவறான பிரச்சாரம் செய்து, அதன் மூலம் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை கண்டிக்கிறேன் என அறிக்கையில் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.