சந்திரபாபு அலுவலகத்தை காலி செய்த ஆந்திர அரசு சாமான்களை தூக்கி போட்டது

ஆந்திரா தலைநகர் அமராவதியில் சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி வந்த அலுவலகத்தை திடீரென காலி செய்தது அம்மாநில அரசு. அதிகாரிகள் வந்து சாமான்களை எடுத்து வெளியே வைத்து காலி செய்திருக்கிறார்கள்.

தெலுங்கு தேசம் கட்சிக்கு இப்ப கெட்ட நேரம். நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் பெரிய தோல்வியைச் சந்தித்தது. அது மட்டுமின்றி, மத்தியில் யாரை சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய எதிரியாக கருதினாரோ அந்த பிரதமர் மோடியே மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார்.

இதைத் தொடர்ந்து, தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சமயத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 6 ராஜ்யசபா உறுப்பினர்களில் 4 பேர் பா.ஜ.க.வுக்கு தாவினர். இதற்கு அமெரிக்காவில் இருந்தே கண்டனம் தெரிவித்தார் சந்திரபாபுநாயுடு. இந்நிலையில், அமராவதியில் சந்திரபாபுநாயுடுவின் வீட்டையொட்டி உள்ள அலுவலகத்தை அம்மாநில அரசு அதிரடியாக காலி செய்திருக்கிறது.

ஆந்திரா மாநில தலைநகர் அமராவதியில் தற்காலிக தலைமைச் செயலகம் கட்டப்பட்ட போது, உண்டவல்லி என்ற இடத்தில் அப்போது முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு பங்களா கட்டப்பட்டது. அந்த பங்களாவையொட்டி முதல்வருக்கான முகாம் அலுவலகமும் கட்டப்பட்டது. ‘பிரஜா வேதிகா’ என்று பெயரிடப்பட்ட அந்த அலுவலகத்தை பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் கட்சியினரை சந்திக்கும் இடமாகவும் சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி வந்தார்.

தேர்தலில் தோற்று ஆட்சியை இழந்தாலும், சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சித் தலைவராகி உள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது அமைச்சர் அந்தஸ்து உடைய பதவி. எனவே, தான் வசிக்கும் அரசு பங்களா மற்றும் அதன் விரிவாக்கமான அலுவலகத்தையும் தானே தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு, புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு கடிதம் அனுப்பினார். இதற்கு ஆந்திர அரசிடம் இருந்து பதில் வரவில்லை.

இந்நிலையில், ஆந்திர மாநில அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை(ஜூன் 22) அன்று திடீரென சந்திரபாபு நாயுடு பங்களாவுக்கு வந்தனர். அந்த பங்களாவை மட்டும் விட்டுவிட்டு, பக்கத்தில் இருந்த அலுவலகத்தை காலி செய்தனர். சாமான்களை வெளியே எடுத்து செல்லுமாறு அங்கிருந்தவர்களுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, அலுவலகம் காலி செய்யப்பட்டது.

இதற்கு தெலுங்குதேசம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அக்கட்சியின் மூத்த தலைவர் ராமகிருஷ்ணடு கூறுகையில், ‘‘அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் என்று ஜெகன் அரசு முன்கூட்டியே தகவல் அனுப்பியிருக்கலாம். அதை விடுத்து பழிவாங்கும் போக்கில் இப்படி செயல்பட்டுள்ளார்கள்.

ஜெகன் ஆட்சியி்ல் நகராட்சித் துறை அமைச்சராக உள்ள போட்சா சத்யநாராயணா கூறுகையில், ‘‘அரசு இடத்தை மீட்க வேண்டியது சட்டப்படியான நடவடிக்கைதான்’’ என்றார்.

ஜெகன்மோகன் ரெட்டியின் உதவியாளர் எனக் கூறி பல லட்சம் மோசடி..! 4 பேர் கொண்ட கும்பல் சிக்கியது
More News >>