ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா ஏன்?

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் ஆச்சார்யா பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த முறை பா.ஜ.க. ஆட்சியின் போது, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பதவியை ராஜினாமா செய்தார், இதற்கு மத்திய அரசுக்கும் அவருக்கும் இடையே உள்ள விரிசலே காரணம் . இதையடுத்து, தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே கவர்னர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் விலகினார். இதையடுத்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி சக்திகாந்த தாஸ் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார். பணமதிப்பிழப்பின் போது, மத்திய அரசின் சார்பில் தினந்தோறும் தகவல்களை வெளியிட்டு அரசுக்கு எதிரான பிரச்னைகளை சமாளித்தவர் சக்திகாந்த தாஸ்.

அதனால், அவர் பொறுப்பேற்றதும் மத்திய அரசுக்கு முழு ஆதரவாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே சமயம், உர்ஜித் படேலுக்கு நெருக்கமாக இருந்த துணை கவர்னர் விரால் ஆச்சார்யாவும் பதவி விலகி விடுவார் என்று பேசப்பட்டது.

ஆனால், ஆச்சார்யா தொடர்ந்து பதவியில் நீடித்தார். அதே சமயம், அதற்கு முன்பு ரிசர்வ் வங்கியில் மத்திய அரசின் தலையீடுகள் குறித்து வெளிப்படையாக பேசி வந்தார். புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் வந்த பின்பு, மத்திய அரசை விமர்சிக்காத ஆச்சார்யா பெரிய அளவில் வங்கி விவகாரத்தில் தலையிடவும் இல்லையாம்.

இந்நிலையில், அவருக்கு பதவிக்காலம் முடிவடைய இன்னும் 6 மாதங்கள் இருந்தும், ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளார். ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பிடிக்காமல் ஆச்சார்யா இருந்தார் என்றும், அதனால்தான் அவர் விலகுகிறார் என்றும் செய்திகள் வெளியாயின. இது பற்றி விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி நிர்வாகம், ‘‘ஆச்சார்யா தனிப்பட்ட காரணங்களால் ஜூலை 23ம் தேதிக்குப் பிறகு தன்னால் பணியில் இருக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

எனவே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

ஆச்சார்யா, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறை பேராசிரியராக பணியாற்றச் செல்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்ன. இதற்கிடையே, அவர் இருந்த துணை கவர்னர் பதவிக்கு ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குனர் மைக்கேல் பாத்ரா அல்லது பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்பால் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், இன்னொரு துணை கவர்னர் என்.எஸ். விசுவநாதனுக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

4 எம்.பி.க்களை இழுத்த பா.ஜ.க; சந்திரபாபு நாயுடு கடும் அதிர்ச்சி; அடுத்து தமிழகத்துக்கு குறி?
More News >>