சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டடம் இடிப்பு ஜெகன் மோகன் உத்தரவு

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது அமராவதியில் கட்டப்பட்ட அரசு கட்டடத்ைத இடிக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆந்திரா முதலமைச்சராக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு இருந்தபோது, புதிய தலைநகர் அமராவதியில் தற்காலிக தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. அப்போது, உண்டவல்லி என்ற இடத்தில் முதலமைச்சருக்காக அரசு பங்களா கட்டப்பட்டது.

அந்த பங்களாவையொட்டி முதல்வருக்கான முகாம் அலுவலகமும் கட்டப்பட்டது. ‘பிரஜா வேதிகா’ என்று பெயரிடப்பட்ட அந்த அலுவலகத்தை பத்திரிகையாளர் சந்திப்புக்கும், கட்சியினரை சந்திக்கும் இடமாகவும் சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி வந்தார்.

தற்போது, சட்டமன்றத் தேர்தலில் தோற்று ஆட்சியை இழந்தாலும், சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சித் தலைவராகி உள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது அமைச்சர் அந்தஸ்து உடைய பதவி. எனவே, தான் வசிக்கும் அரசு பங்களா மற்றும் அதன் விரிவாக்கமான அலுவலகத்தையும் தானே தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு, புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு கடிதம் அனுப்பினார். இதற்கு ஆந்திர அரசிடம் இருந்து பதில் வரவில்லை.

இந்நிலையில், ஆந்திர மாநில அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை(ஜூன் 22) அன்று திடீரென சந்திரபாபு நாயுடு பங்களாவுக்கு வந்தனர். அந்த பங்களாவை மட்டும் விட்டுவிட்டு, பக்கத்தில் இருந்த சந்திரபாபு நாயுடு அலுவலகத்தை காலி செய்தனர். சாமான்களை வெளியே எடுத்து செல்லுமாறு அங்கிருந்தவர்களுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, அலுவலகம் காலி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அந்த அலுவலகத்தில் கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘இந்த கட்டடம், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது. எனவே, இதை இடிக்க உத்தரவிடப்படும்’’ என்று தெரிவித்தார்.

ஏற்கனவே சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போதே, அமராவதி நதிக்கரையில் விதிகளை மீறி இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளதாகவும், இதை இடிக்காமல் விட மாட்டேன் என்றும் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முக்கியப் பிரமுகர் அல்ல ராமகிருஷ்ண ரெட்டி கூறி வந்தார். மேலும், இதற்காக ஒரு வழக்கும் தொடர்ந்து நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மல்லையாக்களை சேர்த்து கொண்ட பா.ஜ.க
More News >>