ஜெயலலிதா ஒரு குற்றவாளி அவரது படத்தை திறப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது - அன்புமணி ராமதாஸ்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு குற்றவாளி. அவரது படத்தை சட்டமன்றத்தில் திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடத்தில் கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், “இன்றைய சூழலில் காவிரியில் தண்ணீர் கிடையாது. கர்நாடகாவில் 31 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. எனவே கர்நாடகா அரசு 10 டிஎம்சியாவது தண்ணீர் திறந்து விட வேண்டும். காவிரி பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டம் கூட்டி கர்நாடகா மற்றும் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைகழக துணை வேந்தர் சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் அனைத்து பல்கலைகழகங்களிலும் ஊழல் நடைபெறுகிறது. துணைவேந்தர் பதவிக்கு ரூ.10 முதல் ரூ.35 கோடி வரை லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. இது பர்னாலா, ரோசையா ஆகியோர் காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது.
லஞ்சம் கொடுத்து பதவியை பெற்ற துணைவேந்தர்கள் பணத்தை எப்படி வசூலிக்கலாம் என்ற நோக்கத்தில் பேராசிரியர் பணியிடத்துக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை வாங்குகின்றனர். பாரதியார் பல்கலைகழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக ரூ.600 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு இருக்கிறது.
இந்த ஊழலில் அமைச்சர்களுக்கும் உடந்தை உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக நடந்த ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். தற்போது எடப்பாடி அரசு பெரும்பான்மை இல்லாத அரசாக உள்ளது. எனவே பெரும்பான்மையை நிரூபித்த பின்னர் தான் தமிழக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு குற்றவாளி. அவர் குற்றவாளி என உச்சநீதிமன்றமும் உறுதிபடுத்தி உள்ளது. எனவே அவரது படத்தை சட்டமன்றத்தில் திறப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுதொடர்பாக தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்வோம்.
மத்திய அரசின் பட்ஜெட் தேர்தல் பட்ஜெட். இதில் எதுவும் நடைமுறைக்கு வரப் போவது இல்லை. மருத்துவ காப்பீட்டுக்கான நிதிஒதுக்கீடு செய்யவில்லை. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு தயாராக இருந்தாலும் எங்கே அமைப்பது என்பதில் அரசியல் காரணங்களுக்காக மாநில அரசு காலம் தாழ்த்தி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.