குஜராத் ராஜ்யசபா இடைத்தேர்தல் சர்ச்சை உச்ச நீதிமன்றம் தலையிட தேர்தல் ஆணையம் எதிர்ப்பு

குஜராத்தில் இருந்து 2 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான இடைத்தேர்தலை தனித்தனியாக நடத்துவது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு, தேர்தல் அறிவிப்பு வெளியான பின், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் உச்ச நீதிமன்றமோ, வேறு யாருமோ தலையிடக் கூடாது என்று கறாராக பதிலளித்துள்ளது.

குஜராத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டிருந்த பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இருவரும் தற்போது மக்களவை எம்.பி.க்களாக வெற்றி பெற்றனர். இதனால் இருவரும் ராஜ்யசபா எம்.பி.பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் காலியான இந்த 2 இடங்களுக்கும் வரும் ஜூலை 5-ந் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் கடந்த 15-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால், மக்களவைப் பொறுத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகவே செயல்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தேர்தல் ஆணையம் ,இந்த ராஜ்யசபா இடைத்தேர்தலிலும் பாஜகவுக்கு சாதகமாக சாதுர்யமான ஒரு முடிவை எடுத்துள்ளது . அதாவது இந்த இரு இடங்களுக்கும் ஒன்றாக தேர்தல் நடத்தாமல் தனித்தனியாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் பாஜகவும், காங்கிரசும் ஆளுக்கொரு எம்.பி. சீட்டை வெற்றி பெறும் நிலை ஏற்படும். தனித்தனியே தேர்தல் நடத்தினால் பாஜகவே 2 இடங்களையும் கைப்பற்றி விடும்.

தேர்தல் ஆணையத்தின் இந்த சூழ்ச்சியால் பதறிப் போன குஜராத் மாநில காங்கிரஸ், எதிர்ப்பு தெரிவித்ததுடன் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது. கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீசும் அனுப்பியிருந்தது.

தற்போது இதற்கு பதிலளித்துள்ள தலைமை தேர்தல் ஆணையம் , தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பின், ஆணையத்தின் அதிகார வரம்பில் தலையிட உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் அதிகாரம் இல்லை. அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடைபெற்று முடியும் வரை எந்த தடையும் எங்களை கட்டுப்படுத்தாது என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தனது பதில் மனுவில் கறாராக தெரிவித்துள்ளது.

60 வருஷமா சென்னையில குடியிருக்கேன்..! நான் அப்படிச் சொல்வேனா?- துரைமுருகன் பல்டி
More News >>