அந்தோ பரிதாப ஆப்கானிஸ்தான்.. வங்கதேசத்திடமும் தோல்வி
உலகக் கோப்பை போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி ஓரளவுக்கு திறமையை வெளிப்படுத்தினாலும் இன்னும் புள்ளிப் பட்டியலில் 'ஜீரோ'வில் இருந்து மீள முடியாமல் பரிதாபமாக தத்தளிக்கிறது. தனது ஏழாவது போட்டியில் வங்கதேசத்திடமும் உதை வாங்கியது.
இந்த உலகக்கோப்பை போட்டித் தொடரில் லீக் போட்டிகள் மூன்றில் 2 பங்கு ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்னமும் வெற்றிக்கணிக்கை தொடங்காத ஒரே அணி ஆப்கானிஸ்தான் மட்டுமே. கடைசியாக நேற்று வங்கதேசத்துடன் மோதிய போட்டியுடன் 7 போட்டிகளில் ஆடி அனைத்திலுமே தோல்வியைத் தழுவிய ஒரே அணி என்ற பரிதாபத்தில் உள்ளது. இன்னும் பாகிஸ்தான், மே.இந்தியத் தீவுகள் அணிகளுடனான ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளதால் வெற்றிக் கணக்கை துவங்குமா? அல்லது புள்ளிப் பட்டியலில் ஜீரோ என்ற நிலையிலேயே முடிவுக்கு வந்து விடுமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஆப்கன் அணி
சவுத்தாம்டனில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
வங்கதேச தொடக்க வீரர்கள் லிட்டன் டாஸ் (16) மற்றும் தமீம் (36) ஆகிய இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.பின்னர் அதிரடியாக விளையாடிய முஸ்பிகுர் ரஹீம் 87 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். மற்றொரு அனுபவ வீரரான ஷகிப் அல் ஹசன் அரைசதம் அடிக்க வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது.
263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, வங்கதேச வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்து நடையை கட்டினர்.
இதனால்,இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மிகக் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற ஆப்கானிஸ்தான் இந்த போட்டியில் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை.47 ஓவர்களிலேயே ஆப்கன் அணி 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இப்போட்டியில், 50 ரன்கள் மற்றும் 5 விக்கெட்களை கைப்பற்றிய வங்கதேச வீரர் ஷகீப் அல் ஹசன், உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் யுவராஜ் சிங்கிற்கு பின் இந்த சாதனையை படைத்த வீரர் என்ற பெருமை படைத்தார்.
இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் அரையிறுதி வாய்ப்பில் வங்கதேச அணி நீடிக்கிறது. 7 புள்ளிகள்டன் ஐந்தாவது இடத்தில் உள்ள வங்கதேச அணி, எஞ்சியுள்ள இரு போட்டிகளில் இந்தியா, மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. இரு ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு வங்கதேசம் தள்ளப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை கிரிக்கெட் ; ஆப்கனுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங்