நீ யாரு, எதுக்கு வீடியோ எடுக்கிறே... செய்தியாளர்கள் மீது திடீர் தாக்குதல்
ஈரோட்டில் அரசு நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் மீது ஆளும்கட்சியினர் தாக்குதல் நடத்தியது பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு குமலன்குட்டை அரசுப் பள்ளியில் ஜூன் 24ம் தேதி மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது தங்களுக்கு அரசின் லேப்டாப் வழங்கப்படவில்லை என்று கடந்த ஆண்டு படித்து முடித்த மாணவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களை முற்றுகையிட்டனர்.
இதைத்தொடர்ந்து, அந்த மாணவர்களிடம் வகுப்பறையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, ஜூனியர் விகடன் நிருபர் நவீன், இந்து தமிழ் திசை நாளிதழ் நிருபர் கோவிந்தராஜ் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.
அப்போது மாணவர்கள் தங்களுக்கு லேப்டாப் வழங்கப்படாதது குறித்து பல கேள்விகளை எழுப்பினர். இதை பதிவு செய்து கொண்டிருந்த ஜூனியர் விகடன் நிருபர் நவீனை சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கத்தின் மகனும், ஈரோடு மாவட்ட அதிமுக மாணவரணிச் செயலாளருமான ரத்தன் பிரித்திவ், ‘நீ யாரு, எதுக்கு வீடியோ எடுக்கிேற... ஒழுங்கா வெளிய போறியா, இல்லையா... என்று கடுமையாக திட்டி, மிரட்டினார். அங்கிருந்த இந்து தமிழ் திசை செய்தியாளர் கோவிந்தராஜையும் கடுமையான வார்த்தைகளில் திட்டியபடி கன்னத்தில் அறைந்து கீழே தள்ளியிருக்கிறார். அ.தி.மு.கவைச் சேர்ந்த சிலர் ஜூனியர் விகடன் நிருபர் நவீனை சட்டையைப் பிடித்து செல்போனை பறித்து கொண்டு. கீழே தள்ளித் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலின் போது, போலீஸ் அதிகாரிகள் அங்கேயே இருந்தும் அதை தடுப்பதற்கு எந்த முயற்சியும் மேற்ெகாள்ளவில்லை. இது பத்திரிகையாளர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்புதான், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, தன்னிடம் மரம் வெட்டியது தொடர்பாக கேள்வி கேட்கும் நிருபரை வெட்டி விட்டுதான் போராட்டம் நடத்துவேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில், ஈரோட்டில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸின் அநாகரீகப் பேச்சு; பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்