குஜராத் ராஜ்யசபா தேர்தல் காங்கிரஸ் மனு தள்ளுபடி
குஜராத்தில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா இடங்களுக்கு ஒரே தேர்தலாக நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மத்திய அமைச்சர்கள் அமித்ஷாவும், ஸ்மிரிதி இரானியும், லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, குஜராத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்தனர். தற்போது இருவருமே லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதால் அவர்களின் 2 ராஜ்யசபா இடங்களும் காலியாகி விட்டன.
இதையடுத்து, இந்த 2 இடங்கள் மற்றும் ஒடிசாவில் 3, பீகாரில் ஒன்று என 6 ராஜ்யசபா இடங்களுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம், குஜராத்தில் 2 இடங்களுக்கும் தனித்தனியாக நோட்டிபிகேஷன் வெளியிட்டது. அதாவது, 2 இடங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தது.
அமித்ஷாவின் வெற்றி, வாக்கு எண்ணிக்கை நடந்த அன்றே அறிவிக்கப்பட்டு விட்டதால் அப்போதே அவரது ராஜ்யசபா இடம் காலியாகி விட்டது. மறுநாள் ஸ்மிரிதி இரானியின் வெற்றி அறிவிக்கப்பட்டதால், அடுத்த நாள்தான் அவரது ராஜ்யசபா இடம் காலியானது. எனவே, தனித்தனியாக தேர்தல் நடத்தப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் காரணம் கூறியது.
குஜராத்தில் மொத்தம் 182 சட்டசபை உறுப்பினர்கள் உண்டு. இதில் 7 இடங்கள் காலியாக உள்ளன. பா.ஜ.க.வில் 104 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸில் 71 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். குஜராத் ராஜ்யசபா தேர்தல் ஒன்றாக நடத்தினால், பா.ஜ.க.வுக்கு ஒரு இடமும், காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைக்கும். தனித்தனியாக நடத்தினால், 2 இடங்களுமே பா.ஜ.க.வுக்குத்தான் கிடைக்கும்.
இதனால், தேர்தலை ஒன்றாக நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்தது. இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘தேர்தல் அறிவித்த பின்பு நீதிமன்றங்கள் தலையிட முடியாது. எனவே, தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள் என்று கூறி, மனுைவ தள்ளுபடி செய்து விட்டது.
குஜராத் ராஜ்யசபா தேர்தல்: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்