40 டிஎம்சி காவிரி நீரை தமிழகத்திற்கு திறக்க வேண்டும் - கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவு

காவிரியில், ஜூன், ஜுலை மாதங்களில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய 40 டிஎம்சி நீரை திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்துக்கு காவிரியில் ஆண்டுதோறும் 177.25 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. ஜூன் மாதத் தவணையாக 9.19 டிஎம்சி நீரை வழங்க ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டும் , 2 டிஎம்சி மட்டுமே வழங்கியது கர்நாடகா .இதற்கு பருவமழையையும், அணைகளில் நீர் இருப்பையும் காரணம் காட்டி வழக்கம்போல் கையை விரித்து விட்டது.

இந்நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் இன்று நடந்தது ஆணையத்தின் தலைவர் மசூத் உசைன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோரும், கர்நாடக அரசுத் தரப்பில் நீர்வளத்துறை செயலாளர், தலைமை பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில்,ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும். கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை என தமிழக அரசு வலியுறுத்தப்பட்டது. ஆனால் கர்நாடக அரசுத் தரப்பில் வழக்கம் போல, பருவ மழையைக் காரணம் காட்டி முரண்டு பிடித்தது.

ஆனாலும், ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரையும், ஜூன் மாதத்திற்கான 9.19 டிஎம்சி நீர் என 40.43 டிஎம்சி நீரை முழுமையாக வழங்கவேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

இந்தக் கூட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்க கர்நாடகத் தரப்பில் கோரிக்கை எழுந்தது. இதற்கு தமிழகத்தின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இனி வரும் கூட்டங்களிலும் மேகதாது பற்றி விவாதிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டதால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாலாறும், தேனாறும் ஓடுமா? தி.மு.க.வுக்கு எடப்பாடி கேள்வி
More News >>