நடிகர் சங்கத்தேர்தல் விவகாரம்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஐசரி கணேஷ் ஆஜராக உத்தரவு

நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய ஐசரி கணேஷ்,நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 23-ந் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிட்டது. திடீரென சுவாமி சங்கரதாஸ் அணி என்ற பெயரில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணி எதிர்த்து போட்டியிட தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

பாக்யராஜ் அணியில் பொதுச் செயலாளர் பதவிக்கு பல்வேறு கல்லூரிகளை நடத்தும் ஐசரி கணேஷ் போட்டியிட்டதால் அந்த அணியும் கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலை நடக்க விடாமல் செய்வதற்காகவே, பாக்யராஜ் அணி போட்டியிடுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

அதே போல் பல்வேறு முட்டுக்கட்டைகளும், வழக்குகளும் தொடரப்பட்டதால் தேர்தல் நடக்குமா ?இல்லையா? என்ற சூழலுக்கு சென்றது. இறுதியில் தேர்தலுக்கு 2 நாட்கள் முன்பு தான் திட்டமிட்டபடி ஜூலை 23-ந் தேதி தேர்தலை நடத்தலாம், முடிவை மட்டும் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இதில் தேர்தலை நடத்தும் இடம் குறித்து நடைபெற்ற விசாரணையின் போது, ஐசரி கணேஷ் தரப்பில் நீதிபதியை தனிப்பட்ட முறையில் அணுகி, தேர்தலை நடத்த இடையூறு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஐசரி கணேஷ் மீது சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்குப் பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் இந்த அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 4 வாரத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என ஐசரி கணேஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

'அல்வா' நாடகத்தின் பெயர் மாற்றம்... இடமும் திடீர் மாற்றம்... எஸ்.வி.சேகர் காமெடி
More News >>