கச்சோரி கடையை ரவுண்டு கட்டிய கமர்சியல் டேக்ஸ்

தமிழ்நாட்டில் நெல்லை அல்வா கடை போல் சில சின்னக் கடைகள் லட்சக்கணக்கில் வியாபாரம் செய்கிறார்கள் அல்லவா? அதே போல், உ.பி.யில் கச்சோரி எனப்படும்.

திண்பண்டம் விற்கும் ஒரு கடை, ஆண்டுக்கு 70 லட்சம் வரை வியாபாரம் செய்கிறதாம். இதை கண்டுபிடித்த வணிக வரித் துறை அதிகாரிகள் அதற்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் ஒரு திண்பண்டம் புகழ் பெற்றிருக்கும். அதிலும் குறிப்பாக ஒருசில கடைகளில் அதற்கு மவுசு அதிகமாகவே இருக்கும். அதாவது நெல்லையில் சாந்தி ஸ்வீட்ஸ் மற்றும் இருட்டுக் கடை அல்வா, திருவையாறு அசோகா அல்வா, மணப்பாறை முறுக்கு என்று ஆரம்பித்தால் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதே போல், உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் ‘கச்சோரி‘ என்ற சமோசா போன்ற திண்பண்டம் பிரபலமாக பேசப்படுகிறது. அந்த நகரில் மட்டும் சுமார் 600 கச்சோரி கடைகள் இருக்கிறது. அதில் ஒரு குட்டிக் கடையில்தான் செம வியாபாரம் நடக்கிறது. சீமா தியேட்டர் அருகே ஒரு சின்னத் தெருவில் உள்ள அந்த கடைக்கு உரிமையாளர் முகேஷ் குமார், ஆரம்ப காலத்தில் இருந்தே விற்பனை வரி செலுத்துவதில்லையாம்.

தற்போது நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வந்தபின்பும் அவர் அதில் பதிவு செய்யவில்லை. அதிலும், கடந்த ஏப்ரல் முதல் ஆண்டு வர்த்தகம் ரூ.40 லட்சம் வரைக்கும் உள்ள வியாபாரிகள், ஜி.எஸ்.டி. கவுன்சிலில் பதிவு செய்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதால், அவர் பதிவு செய்யவில்லை. ஆனால், அவரது கடையில் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் வரை வர்த்தகம் நடைபெறுவதாக வணிக வரித் துறைக்கு புகார் வந்திருக்கிறது.

இதையடுத்து, வணிக வரித் துறை அதிகாரிகள் அந்த கடையை காலையில் இருந்து மாலை வரை கண்காணித்து இருக்கிறார்கள். அவர்கள் கண்காணிப்பது கடைக்காருக்கு தெரியவில்லை. அதிகாரிகள் 2 நாள் கண்காணித்து குத்துமதிப்பாக கணக்கிட்டதில், ஆண்டு வர்த்தகம் நிச்சயம் ரூ50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று தெரிய வந்தது. இதையடுத்து, அந்த கடையில் திடீர் சோதனை நடத்தி, கணக்குகளை வாங்கிப் பார்த்தனர். அப்போது தனது கடையில் நடக்கும் வியாபாரத்தை முகேஷ்குமார் ஒப்புக் கொண்டார்.

இது குறித்து, வணிக வரித் துறை துணை ஆணையர் ரவீந்திரபால் சிங் கூறுகையில், ‘‘தற்போது அதிகாரிகள் கணக்குகளை சரிபார்த்ததில், ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறலாம் என்று தெரியவந்திருக்கிறது. எனவே, கடைக்காரருக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கிறோம். அவரை ஜி.எஸ்.டி. பதிவு செய்யக் கூறியிருக்கிறோம். மேலும், விசாரணைக்குப் பின்பு ஜி.எஸ்.டி. கட்டாததற்கான அபராதம் வசூலிக்கப்படும்’’ என்றார்.

More News >>