வானத்திலேயே பறந்தார்கள்... காங்கிரசை விளாசிய மோடி
‘காங்கிரஸ் தலைவர்கள் எப்போதும் வானத்திலேயே பறந்தார்கள், அவர்களுக்கு கீழே நடப்பதே தெரியவில்லை...’’ என்று பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் அவர் உரை முழுவதும் எதிர்க்கட்சிகளை தாக்குவதில்தான் குறியாக இருந்தது.
மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அந்த விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேச்சு முழுக்க காங்கிரசை கடுமையாக விமர்சிப்பதிலேயே இருந்தது. அவர் பேசியதாவது:
காங்கிரஸ் தலைவர்கள் வானத்திலேயே பறந்தார்கள். அவர்களுக்கு கீழே நடப்பதே தெரியவில்லை. களத்தில் என்ன நிலைமை என்பது அவர்களுக்கு தெரியாது. இன்னும் கூட அவர்கள் உயரே, உயரே பறக்கட்டும்(பா.ஜ.க. உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி ஆரவாரம்).
சிலர் இதை யார் செய்தது? இதை யார் செய்தது? என்று கேள்விகளை எழுப்பினார்கள். (காங்கிரஸ் உறுப்பினர்கள் பேசும் போது கடந்த 70 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பெரிய திட்டங்களை குறிப்பிட்டு, இதையெல்லாம் யார் செய்தது? காங்கிரஸ் செய்யவில்லையா? என்று கேட்டிருந்தனர்) அவர்களிடம் நான் கேட்கிறேன். இன்று எமர்ஜென்சி கொண்டு வரப்பட்ட தினம். எமர்ஜென்சியை கொண்டு வந்தது யார்? அரசியல் சட்டத்தின் நோக்கத்தை தோற்கடித்தது யார்? நீதித்துறையை சீர்குலைத்தது யார்? மீடியா மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது யார்? அந்த இருட்டு நாட்களை நாம் மறந்து விட முடியாது.
காங்கிரஸ் ஆட்சியில் நரசிம்மராவ், மன்மோகன் ஆற்றிய பணிகளை யாராவது பேசியிருக்கிறார்களா? ஒரு குடும்பத்தைப் பற்றியே பேசுகிறார்கள். பிரணாப் முகர்ஜிக்கு நாங்கள்தான் பாரதரத்னா கொடுத்தோம். நீங்கள் மன்மோகனுக்கு அளித்தீர்களா?எதிர்க்கட்சிகள் சின்ன விஷயங்களை கவனிக்காமல் விட்டு விடுகின்றனர். அவர்கள் மக்களை புரிந்து கொள்ளவே இல்லை. அவர்கள் களத்தில் இல்லவே இல்லை. மக்கள் உறுதியான ஆட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
தேர்தல் வெற்றி, தோல்வியை நான் பெரிதுபடுத்தவில்லை. 130 கோடி இந்தியர்களுக்கு சேவை புரிவதற்கு வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.