ஆஸி.யிடம் பணிந்த இங்கிலாந்து .! அரையிறுதி வாய்ப்பு அம்பேல் தானா?

உலகக்கோப்பை கிரிக்கெட்டில், 36 வருடங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் போட்டிகளை நடத்தும் இங்கிலாந்துக்கு சோதனை மேல் சோதனையாக உள்ளது. ஆஸி.க்கு எதிரான போட்டியிலும் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்துக்கு அரையிறுதி வாய்ப்பு மங்கிக் கொண்டே போகிறது.

உலகக்கோப்பை தொடரில் பாதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், அரையிறுதி வாய்ப்பானது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளுடன் இங்கிலாந்துக்கும் பிரகாசமாக இருந்தது. ஆனால் கடைசியாக இலங்கையிடம் இங்கிலாந்து அடைந்த தோல்வி தான் இந்த உலகக்கோப்பை தொடரின் போக்கையே தலைகீழாக மாற்றி விட்டது எனலாம்.அதுவரை இனி அரையிறுதி வாய்ப்பே இல்லை என்று துவண்டு போய்க் கிடந்த இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் உயிர் பெற்று துள்ளிக்குதிக்க ஆரம்பித்து விட்டன.

இதனால் அரையிறுதி ரேசில் இங்கிலாந்துடன் மேலும் 3 அணிகள் போட்டி போட , கூட்டல் கழித்தல் கணக்குப் பார்க்க ஆரம்பித்து விட்டன. இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமெனில், எஞ்சியுள்ள ஆஸி., நியூசி., இந்தியா ஆகிய 3 அணிகளுக்கு எதிரான போட்டிகளில் 2-ல் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப் பட்டது.

இத்தகைய நெருக்கடியில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய இங்கிலாந்து, 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி பரிதாபமாக காட்சியளிக்கிறது.

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த லீக் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் பீல்டிங்கை தேர்வு செய்தார்.ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச், வார்னர் ஜோடி மீண்டும் ஒரு சூப்பர் ஓபனிங் கொடுத்தது. வார்னர் (53) ரன்கள் எடுத்து தனது 20-வது அரைசதத்தை பதிவு செய்த போது மொயீன் அலி சுழலில் சிக்கினார். அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த பின்ச், ஒருநாள் அரங்கில் 15-வது சதம் 100 ரன்களில் அவுட்டானார். அதன் பின் ஆஸ்திரேலியாவின் ரன் வேகத்தை இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்த 50 ஓவர் முடிவில் ஆஸி அணி 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்தை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டினர். பெஹ்ரன்டர்ப் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தில் வின்ஸ் டக் அவுட்டானார்.மறுபக்கம் தன் பங்கிற்கு மிரட்டிய ஸ்டார்க், ஜோ ரூட் (8),மார்கனை (4) வீழ்த்த, இங்கிலாந்து திணறியது. பென் ஸ்டோக்ஸ் மட்டும் சமாளித்து ஆடி 89 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்னில் அட்டாக இங்கிலாந்து அணி 44.4 ஓவரில் 221 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, 12 புள்ளிகளுடன் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.

இங்கிலாந்து அணி இனி நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுடன் மோத வேண்டி உள்ளது. இந்தத் தொடரில் இந்த இரு அணிகளும் இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வி பெறாமல் வெற்றி நடை போட்டு வரும் அணிகளாகும். இங்கிலாந்தோ, இந்த அணிகளையும் வென்றால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இங்கிலாந்தின் இந்தத் தோல்வியால் இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் இன்னும் சுறுசுறுப்பாகி அரையிறுதி வாய்ப்புக்கு மல்லுக்கட்ட தயாராகியுள்ளன. இதனால் இந்தத் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் அனல் பறக்கப் போவது நிச்சயம்.

உலகக் கோப்பை கிரிக்கெட் ; ரூட், பட்லர் சதம் வீண்... பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இங்கிலாந்து
More News >>