தப்பு தப்பா பேசக்கூடாது.. நானும் பல விஷயங்களை பேசுவேன்...! தினகரனை எச்சரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்
தம்மைப் பற்றி டிடிவி தினகரன் தவறாக பேசுவதாகவும், அது தொடர்ந்தால் தானும் பல்வேறு உண்மைகளை போட்டுடைப்பேன் என்று தங்க தமிழ்ச்செல்வன் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமமுகவில் டிடிவி தினகரனுக்கும், தங்க. தமிழ்ச்செல்வனுக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. தினகரனை படு மோசமான வார்த்தைகளால் தங்க. தமிழ்ச்செல்வன் விமர்சித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
இந்த ஆடியோ பேச்சு வெளியானதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன், தங்க .தமிழ்ச்செல்வன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். ஏற்கனவே தங்க .தமிழ்ச்செல்வனை எச்சரித்ததாகவும், கட்சிப் பதவியை பறிக்கப்போவதாகவும் கூறி விட்டதாகவும் தினகரன் கூறியிருந்தார். மேலும் தங்க தமிழ்ச்செல்வன், தமக்கு எதிராக விஸ்வரூபமெல்லாம் எடுக்க முடியாது என்னைக் கண்டால் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார் என்று தினகரன் கிண்டலாக கூறியிருந்தார். அத்துடன் அவரை கட்சியிலிருந்து நீக்க எந்த அச்சமோ, தயக்கமோ இல்லை என்றாலும், தானாக போகட்டும் என்று அமைதி காத்ததாகவும் கூறிய தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஒரு முடிவு எடுத்து விட்டார். என்னை தாக்கி பேசும் படி அவரை யாரோ இயக்குகிறார்கள் என்றெல்லாம் தினகரன் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் ஆடியோ வெளியான பின் நேற்று முழுவதும் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு ஊடகங்களின் பார்வையிலும் படாமல் இருந்த தங்க. தமிழ்ச்செல்வன், இன்று சில ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், தினகரன் என்னைப் பற்றி தவறாக பேசுகிறார். இது போன்று பேசுவது ஒரு கட்சியின் தலைமைக்கு அழகல்ல. என்னை பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை. யார் சொல்லியும் நான் பேசவுமில்லை. நான் வளர்ந்து வருவதைப் பிடிக்காமல் என் மீது பொறாமையில் கூட இப்படி தினகரன் பேசலாம்.
நான் உண்மையை பேசியதாலேயே என்னை ஊடகங்களும் பெரிதுபடுத்தின. நான் இன்னும் அமைதியாக இருப்பேன். ஆனால் என்னை சீண்டினால் நானும் பல விஷயங்களை போட்டுடைப்பேன். கூவத்தூர், புதுச்சேரி,கர்நாடகா ரிசார்ட்டுகளில் எங்களை அடைத்து வைத்தது ஏன்? என்பதையெல்லாம் கூற வேண்டியிருக்கும் என்று தங்க. தமிழ்ச்செல்வன் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் டிடிவி தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையிலான மோதல் இன்னும் வெடித்து, மேலும் பல ரகசியங்கள் அம்பலமானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
போனா போகட்டுமே..! நீக்கம் என்ற அறிவிப்புக்கு வேலையிருக்காதுல்ல..! தினகரன் அசால்ட் பதில்