தள்ளாடும் இந்தியா தவிர்ப்பது எங்ஙனம்? (ஜூன் 26 - சர்வதேச போதை மருந்து எதிர்ப்பு நாள
இந்தியாவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையானோரின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 5 கோடியே 70 லட்சம் பேர்! அகில இந்திய மருத்துவ சேவை கல்வி நிறுவனம் (AIIMS) செய்த ஒரு கணக்கெடுப்பின் வாயிலாக இந்த தகவல் கிடைத்துள்ளது.ஏறத்தாழ 6 கோடி என்னும் இந்திய மது அடிமைகளின் எண்ணிக்கை, இத்தாலி உள்பட உலகின் 172 நாடுகளில் உள்ள மக்கள் தொகையின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாகும்.
மது அடிமைகள்:இந்தியாவின் 186 மாவட்டங்களில் 2 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 5 லட்சம் மக்களிடையே செய்யப்பட்ட கணக்கெடுப்பில் 123 மாவட்டங்களைச் சேர்ந்த 70,000 பேர் சட்டவிரோதமான போதை மருந்துகளை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.மது அடிமைத்தனம், கட்டாயம் மருத்துவ கண்காணிப்புக்கு உள்பட வேண்டும். ஆனால், மது அடிமைகளில் 3 விழுக்காட்டினர் மட்டுமே மருத்துவ சிகிச்சை பெற முன் வருகின்றனர் என்பது கவலைக்குரிய உண்மை. 5 கோடியே 70 லட்சம் பேரில் 3 கோடியே 20 லட்சம் பேர் உடனடியாக மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுமளவுக்கு அடிமைநிலையில் உள்ளனர். ஆனால், ஐந்து மது அடிமைகளுள் ஒருவர் மட்டுமே தன் நிலை உணர்ந்து சிகிச்சைக்கு ஒப்புக்கொள்கிறார் என்றும் அகில இந்திய மருத்துவ சேவை கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆணென்ன... பெண்ணென்ன? மது அருந்துவதில் சந்தேகமில்லாமல் அதிகமாக இருப்பது ஆண்கள் தாம். 17 ஆண்களுக்கு மதுப்பழக்கமிருப்பின் ஒரு பெண்ணுக்கு அப்பழக்கம் உள்ளதாம். அதாவது இந்திய ஆண்களில் 27.3 விழுக்காட்டினர் மது பயன்படுத்துகின்றனர். 1.6 விழுக்காடு பெண்களும் அதை பயன்படுத்துகின்றனர்.
ஏனைய மருந்துகள்:மதுப்பழக்கம் உள்ளவர்கள் ஒரு பக்கமிருக்க, கஞ்சா, ஹெராயின், ஓபியம் போன்ற போதை மருந்துகளை 3 கோடியே 10 லட்சம் இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர் என்று ஓராண்டின் அறிக்கை கூறுகிறது. இவர்களுள் 72 லட்சம் பேர் அப்பழக்கங்களுக்கு அடிமைகளாகிவிட்டனர். அவர்களுள் இருபது பேருக்கு ஒருவர் என்ற கணக்கில்தான் சிகிச்சை பெற முன்வருகின்றனர்.
கஞ்சா போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உத்தரபிரதேசம், பஞ்சாப், சிக்கிம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லியில் தேசிய சராசரி அளவை விட அதிகம் உள்ளது. பஞ்சாப், சிக்கிம் இரு மாநிலங்களிலும் போதை வஸ்துகளினால் வரும் ஆரோக்கிய கேடு அதிகம் தென்படுகிறது.
ஏறத்தாழ 1 கோடியே 18 லட்சம் பேர் மருத்துவம் சார்ந்த மருந்துகளை போதைக்கு தவறாக பயன்படுத்துகின்றனர். இளம்வாலிபர்களின் எண்ணிக்கை இதில் அதிகம். 4 லட்சத்து 60 ஆயிரம் சிறுவர்களுக்கு இதிலிருந்து விடுபட உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர். மருத்துவம் சார்ந்த பொருள்களை போதைக்காக பயன்படுத்துவதில் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, டெல்லி மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாடு அமைச்சகத்தின் உதவியுடன் அகில இந்திய மருத்துவ சேவை கல்வி நிறுவனத்தின் உதவியுடன் தேசிய போதை மருந்து பாதுகாப்பு சிகிச்சை மையம் (NDDTC) ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 10 முதல் 75 வயது வரையுள்ள 4 லட்சத்து 73 ஆயிரம் நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் சட்டவிரோத பயன்பாடு பற்றிய உண்மைகள் தெரிய வந்துள்ளன.
குறியாகும் இளம்தலைமுறையினர்:தோழமை வட்டம் மூலம் சிறுவர் மற்றும் இளம்வாலிபர்கள் போதை பழக்கத்திற்குள் தள்ளப்படுகின்றனர். சட்டவிரோதமாக போதை வஸ்துகளை விற்போரும் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களையே குறி வைக்கின்றனர். அந்த வயதிற்கான அற்ப சந்தோஷம், எதிர்காலத்தை குறித்து குடும்பத்தினர் கொடுக்கும் அழுத்தம், பாடச்சுமை போன்ற பல்வேறு காரணங்கள் இதற்குக் கூறப்பட்டாலும், நம் இளம்சமுதாயத்தின்மேல் அக்கறையான பார்வை அனைவருக்கும் வேண்டும் என்பதே இதன் மூலம் வெளிப்படும் உண்மையாகும்.
போதை பழக்கம், பாதிக்கப்பட்ட ஒருவரை சார்ந்ததல்ல. அது குடும்பம் மற்றும் சமுதாயம் சார்ந்தது. போதை பழக்கம், மனித குணமோ, வழக்கமோ அல்ல; அது சிகிச்சை தேவைப்படும் ஒரு நோய் என்று அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
16 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்கள்..! ஆந்திராவில் நிகழ்ந்த பரிதாபம்