கிரிக்கெட் பேட்டால் அதிகாரியை அடித்த பாஜக எம்.எல்.ஏ. கைது
விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க வந்த நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் அடித்த பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் கன்ஜி என்ற பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க நகராட்சி உத்தரவிட்டது.
இதையடுத்து, அந்த கட்டடத்தை இடிப்பதற்கு நகராட்சி அலுவலர் திரேந்திர பயாஸ் தலைமையில் ஊழியர்கள் கடந்த 25ம் தேதியன்று வந்தனர். அப்போது அந்த கட்டடத்தை இடிக்கக் கூடாது என்று பா.ஜ.க.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஆகாஷ் விஜய்வர்ஜியா எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால், அதை ஏற்க மறுத்து திரேந்திர பயாஸ், கட்டடத்தை இடிக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதனால், ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ. ஆகாஷ், கிரிக்கெட் பேட்டை எடுத்து வந்து நகராட்சி அதிகாரி திரேந்திர பயாஸை கடுமையாக தாக்கினார்.
ஆனாலும், நாட்டையே ஆளும் கட்சியாயிற்றே... அதிகாரி எதுவும் செய்ய முடியாமல் போனார். ஆனால், அதிகாரியை ஆகாஷ் அடிக்கும் காட்சியை யாரோ வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பி விட்டார். இதையடுத்து, ஆகாஷ் எம்.எல்.ஏ. மீது வழக்கு தொடர்ந்து போலீசார், அவரை மறு நாள் கைது செய்தனர். இந்த ஆகாஷ், பா.ஜ.க. மூத்த தலைவரும், பொதுச் செயலாளருமான கைலாஷ் விஜய்வர்ஜியாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.