ரஜினியுடன் கூட்டணி வைக்க மாட்டேன்! - ஏன் என விளக்கிய கமல்ஹாசன்

ரஜினி அரசியலின் நிறம் காவியாக இருந்தால், அவர் அதை மாற்றிக்கொள்ளாவிட்டால், அவருடன் நான் கூட்டணி வைக்கமாட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் பிசினஸ் ஸ்கூல் ஆப் நிகழ்ச்சியிலும், வருடாந்திர இந்திய மாநாட்டிலும் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார்.

அப்போது கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் ரஜினிகாந்துடன் அரசியல் கூட்டணி வைப்பீர்களா என கேட்டபோது, “நானும், ரஜினிகாந்தும் சிறந்த நண்பர்கள். ஆனால், அரசியல் என்பது வேறு.

என்னுடைய நிறம் கறுப்பு, நடிகர் ரஜினியின் நிறம் காவியாக இருக்காது என நம்புகிறேன். அப்படி ஒருவேளை ரஜினி அரசியலின் நிறம் காவியாக இருந்தால், அவர் அதை மாற்றிக்கொள்ளாவிட்டால், அவருடன் நான் கூட்டணி வைக்கமாட்டேன்.

தமிழகத்தில் ஊழல் இல்லாத அரசியல் சூழலை நான் விரும்புகிறேன், அரசியல்வாதிகளும் அவ்வாறே இருக்க ஆசைப்படுகிறேன். என்னுடைய படங்கள் எப்படி வித்தியாசமாக இருக்கின்றனவோ அதுபோலவே, என்னுடைய அரசியலையும் மற்றவர்களுடன் வேறுபட்டு வைத்து இருக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

More News >>