பா.ஜ.க.வை வெளுத்து வாங்கிய திரிணாமுல் பெண் எம்.பி.
பா.ஜ.க. ஆட்சியின் ஏழு பாசிசம் என்று குறிப்பிட்டு, நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி. மகுவா மோயித்ரா வெளுத்து வாங்கினார்.
மேற்கு வங்க மாநிலம், கிருஷ்ணன்நகர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பி., மகுவா மோயித்ரா, அமெரிக்காவில் படித்து முதலீட்டு வங்கி ஒன்றில் பணியாற்றியவர்.
ஆங்கிலத்தில் ஆக்ரோஷமாக பேசக் கூடிய மோயித்ரா, தனது கன்னிப் பேச்சை, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘‘வரலாற்றில் எந்த பகுதி நமக்கு வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அரசியல் சட்டத்தை பாதுகாத்து கடைபிடிப்பதா அல்லது அதை சவப்பெட்டியில் அடைத்து தூக்கி்ச் செல்வதையா என்று முடிவு செய்ய வேண்டும்’’ என்று பா.ஜ.க.வை தாக்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘பா.ஜ.க. ஆட்சியின் பாசிச நடவடிக்கைகளுக்கு ஏழு அடையாளங்கள் என்று குறிபி்ட்டு பேசினார்.
எதிர்குரல்களை ஒடுக்குவது, மொத்த மீடியாவையும் அடக்கி ஆள்வது, வெறுப்புணர்வை தூண்டுவது என்று வரிசையாக அடுக்கினார். ‘‘இந்த ஆட்சியாளர்கள் தாங்கள் உருவாக்கும் பேரரசில் சூரியன் மறையவே மறையாது என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு இது நல்ல நாட்களாக தெரியலாம். ஆனால், அவர்கள் கண்களை திறந்து பார்த்தால், நாட்டின் குரல் வேறொரு மாதிரி இருப்பதை காணலாம்’’ என்று விளாசி தள்ளினார்.
அவரது பேச்சுக்கு அவ்வப்போது ஆளும் பா.ஜ.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதை பொருட்படுத்தாமல், அவர்களை அடக்கி சபையில் தனக்கு உரையாற்ற வாய்ப்பு தர வேண்டும் என்று சபாநாயகரிடம் ஓங்கி பேசினார். அவரது உரை எதிர்க்கட்சிகளிடம் மட்டுமின்றி, ட்விட்டர், பேஸ்புக் என்று சமூக ஊடகங்களிலும் பிரபலமாகியது.