அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளர் நியமனம்
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளராக மெக்கானிக்கல் துறை பேராசிரியர் கருணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பணியாற்றி வந்தவர் குமார். இவரின் பதவிக்காலம் கடந்த 20ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கு முன்பாகவே, கடந்த மூன்று மாதங்களாக புதிய பதிவாளரை நியமிப்பதற்கான தேடுதல் நடைபெற்றது. பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயே பதிவாளருக்கு பதவிக்கு பலரும் விண்ணப்பித்திருந்தனர்.
இதையடுத்து, பல்கலைக்கழக சிண்டிகேட் குழுக் கூட்டத்தில் விண்ணப்பித்திருந்தவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற சிண்டிகேட் குழு கூட்டத்தில், பல்கலை விதிகளுக்கு உட்பட்டு அனுபவம் வாய்ந்தவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, துணைவேந்தரிடம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளராக கருணாமூர்த்தியை நியமித்து துணைவேந்தர் சூரப்பா உத்தரவிட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதிவாளர் கருணாமூர்த்தி, அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறையில் பேராசிரியராக தற்போது பணியாற்றி வருகிறார்.
இவர் ஏற்கனவே மெக்கானிக்கல் பிரிவின் துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது சிண்டிகேட் குழு உறுப்பினராக இருக்கும் கருணாமூர்த்தி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பதவியில் இருப்பார்.