அவங்க 37 பேர்... நான் ஒத்தை ஆள்...! மக்களவையில் கெத்து காட்டிய ரவீந்திரநாத் குமார்
மக்களவையில் அதிமுக சார்பில் தான் ஒரே ஒரு எம்.பி. தான் என்றாலும், எனக்கு பேச நேரம் கொடுத்தால், தண்ணீர் பிரச்னை தொடர்பாக தமிழக அரசு மீது திமுக கூட்டணி எம்.பி.க்கள் 37 பேர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் உள்ளது என்று ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத் குமார் மக்களவையில் ஆவேசம் காட்டி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டார்.
மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து காரசார விவாதம் நடைபெறுகிறது. குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு தவறிவிட்டது. அதிமுக அரசு ஊழல் அரசு என்றெல்லாம் திமுக எம்.பி.தயாநிதி மாறன் நேற்று பேசினார். தமிழக அரசை ஊழல் அரசு என்று தயாநிதிமாறன் குறிப்பிட்டதற்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த வார்த்தையை சபைக் குறிப்பில் நீக்குவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.
இந்நிலையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அதிமுக உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் இன்று மக்களவையில் பேசினார். அப்போது, தமிழக அரசு சார்பில் ஒரே பிரதிநிதியாக நான் மட்டுமே வந்துள்ளேன். ஆனால், அவர்கள் 37 பேர் உள்ளனர். என்னிடம் தண்ணீர் பிரச்னை தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்த புள்ளிவிவரப்பட்டியல் உள்ளது. அவர்கள் விரும்பினால், நான் அவர்களிடம் அதைக் கொடுக்கிறேன். அவர்களுக்கு ஆதரவாகத் தான் மீடியாக்களும் உள்ளன. எனவே நான் கொடுக்கும் புள்ளி விபரங்களை மறைக்காமல் மீடியாவில் வெளியிட வேண்டும். என்னைப் பேச அனுமதியுங்கள். தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து விளக்க, தமிழக அரசின் ஒரே பிரதிநிதி நான் மட்டும்தான். தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க தற்போதும், எதிர்காலத்துக்குமான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நான் தவறான தகவல்கள் எதையும் கூறவில்லை என்றெல்லாம் ஒற்றை ஆளாக மக்களவையில் உரத்த குரலில் பேசினார். அப்போது திமுக எம்.பி.க்கள் சிலர் கூச்சலிட, ரவீந்திரநாத் துக்கு ஆதரவாக பாஜக எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர்.
மக்களவைக்கு முதல் முறையாக, எதுவும் அதிமுகவின் ஒரே ஒரு எம்பியாக சென்றுள்ள ரவீந்திரநாத் குமார் என்ன சாதித்து விடப் போகிறார் என்று பலரும் கிண்டல் செய்தனர்.இந்நிலையில் கையில் ஆதாரங்களை வைத்துக் கொண்டு, எந்த பதற்றமும் இன்றி ரவீந்திரநாத் இன்று பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது என்றே கூறலாம். அதுவும் அவர்கள் 37 பேர்...நான் ஒரே ஆள்.. என்று திரும்பத் திரும்ப அழுத்தம் திருத்தமாக ஆங்கிலத்தில் உச்சரித்தது அனைவரையும் அடடா போட வைத்து விட்டார் என்றே கூறலாம்.