நியூசி.யின் தொடர் வெற்றிக்கு குழிபறித்த பாகிஸ்தான் 1992 வரலாறு மீண்டும் திரும்புமா?
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், அதிரடி திருப்பங்கள் ஆரம்பமாகிவிட்டன. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாத நியூசிலாந்து அணியை வீழ்த்திய பாகிஸ்தான், தனது அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், பாபர் ஆஸம் அபார சதம் அடிக்க 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா அணி மட்டும் முதல் அணியாக நுழைய மற்ற 3 இடங்களுக்கு 6 அணிகளிடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் இந்தியாவும், நியூசிலாந்தும் அரையிறுதிக்குள் எளிதில் காலடி எடுத்து வைத்து விடும் என்றாலும், 4-வது அணி எது என்பதில் தான் பெரும் போராட்டமாகி விடும் என்ற நிலை உருவாகியுள்ளது.
இதற்குக் காரணம், ஆரம்பத்தில் தோல்விகளை தழுவிய இலங்கை, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் திடீரென எழுச்சி பெற, எளிதில் செமி பைனலுக்குள் நுழைந்து விடலாம் என்ற இங்கிலாந்து அணியின் நிலை தான் பரிதாம். இதனால் அரையிறுதிக்கு தகுதி பெற இங்கிலாந்து அணியுடன் இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மல்லுக்கு நிற்கின்றன.
இந்நிலையில், பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் இருந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாகிவிட்டது. தொடக்க வீரர் கப்தில் 5 ரன்களில் ஆம்ரிடம் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
மற்றொரு தொடக்க வீரர் மன்றோ 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி வேகத்தில் மிரட்ட அடுத்து டெய்லர் (3), லதாம் (3) ஆகியோரும் நடையைக் கட்டினா. இதனால் 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நியூசிலாந்து .இதன் பின் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சனுடன் நீஷம் ஜோடி சேர ஆமை வேகத்தில் ரன்களை சேர்த்தனர். ஆனால் வில்லியம்சனும் 41 ரன் களில் அவுட்டானார்.
இதன் பின் நீஷம் (97)- கிராண்ட் ஹோம் (64) ஜோடி நியூசிலாந்தை சரிவிலிருந்து மீட்டது என்றே கூறலாம். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், கடைசிக் கட்டத்தில் ரன்களையும் மளமளவென சேர்க்க 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன்களை மட்டுமே சேர்த்தது.
238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், தொடக்க வீரர் பகர் சமன் 9 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீரரான இமாம்-உல்-ஹக் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.பின்னர் வந்த பாபர் ஆஸம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில், முகம்மது ஹபீஸ் 32 ரன்களிலும், ஹாரிஸ் சோகைல் 68 ரன்களும் சேர்க்க. 49.1 ஓவர்களில் இலக்கை எட்டிய பாகிஸ்தான் அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.கடைசிவரை ஆட்டமிழக்காத பாபர் ஆசம், 101 ரன்களைக் குவித்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் அணி, 7 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்து வங்கதேசம், ஆப்கான் அணிகளுடன் பாகிஸ்தான் மோத உள்ளது. இந்த இரு அணிகளையும் எளிதில் வெல்லும் பட்சத்தில் பாகிஸ்தான் அரையிறுதிக்குள் இலகுவாக நுழைந்து விடும் என்பது உறுதி.
கடந்த 1992-ல் உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றது. அப்போதும் லீக் ஆட்டங்களின் ஆரம்பத்தில் தோல்விகளைத் தழுவிய பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியுடனான போட்டியில் வெற்றிபெற்றது. அதன் பின் எழுச்சி பெற்ற பாகிஸ்தான் வெற்றி மேல் வெற்றியைக் குவித்து கோப்பையையும் வென்றது. தற்போதும் பாகிஸ்தான் அணி திடீரென எழுச்சி பெற்றுள்ளதால் 1992 வரலாறு மீண்டும் திரும்புமோ? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆஸி.யிடம் பணிந்த இங்கிலாந்து .! அரையிறுதி வாய்ப்பு அம்பேல் தானா?