நாங்கள் எப்படி இருந்தோம்... மோடிக்கு மன்மோகன் கடிதம்
‘எனக்கு அளிக்கப்பட்ட அலுவலகப் பணியாளர்களை குறைக்கக் கூடாது’’ என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள பிரதமர் மோடி மறுத்து விட்டார்.
முன்னாள் குடியரசு தலைவர்கள், முன்னாள் பிரதமர்களுக்கு அரசு பங்களா மற்றும் அலுவலகம் ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தி கொடுக்கும். அந்த அலுவலகத்தில் குரூப்-1 அதிகாரி தலைமையில் 15 பேர் வரை பணியாற்றுவார்கள். நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது இதற்கு ஒரு விதிமுறை கொண்டு வரப்பட்டது. அதன்படி, குரூப்-1 அதிகாரி தலைமையில் டைப்பிஸ்ட், உதவியாளர்கள், காவலாளிகள், டிரைவர்கள், பியூன்கள் என்று 14 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் 5 ஆண்டு காலத்திற்கு பணியாற்றுவார்கள்.
அதன்பிறகு, 14 பேர் என்பது 5 ஆக குறைக்கப்படும் என்று விதிமுறை வகுக்கப்பட்டது. ஆனாலும், முன்னாள் பிரதமர்கள் ஐ.கே.குஜ்ரால், தேவகவுடா ஆகியோர் தங்கள் அலுவலகத்தில் 14 பேரை தொடர்ந்து வைத்து கொள்ள கோரிக்கை விடுத்தனர். அதை கடந்த கால காங்கிரஸ் அரசு ஏற்றுக் கொண்டு அனுமதியளித்திருந்தது.
இந்நிலையில், மன்மோகன்சிங்கிற்கு அளிக்கப்பட்ட 14 பேரில் 5 பேரைத் தவிர மற்ற ஊழியர்களை கடந்த மாதம் மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. அதாவது, ஒரு துணைச் செயலாளர், 2 தனி உதவியாளர்கள், 2 பியூன், ஒரு இளநிலை கிளார்க் என்று 5 பேர் மட்டும் தொடர்ந்து பணியில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். கடந்த மே 25ம் தேதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிரதமர் மோடி 2வது முறை பதவியேற்றிருக்கவில்லை. எனவே, அவர் பதவியேற்ற பின்பு, அவருக்கு மன்மோகன்சிங் ஒரு கடிதம் எழுதினார்.
அதில் தனக்கு அளிக்கப்பட்ட ஊழியர்களை தொடர்ந்து நீடிக்க அனுமதிக்குமாறும், 5 பேராக குறைக்கக் கூடாது என்றும் கேட்டிருந்தார். ஆனால், இதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து உடனடியாக ஒரு பதில் கடிதம் வந்தது. அதில், பிரதமர் மோடி அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மன்மோகன்சிங் தற்போது இன்னொரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், ‘‘நாங்கள் ஆட்சியில் இருந்த போது, வாஜ்பாய் முன்னாள் பிரதமராகி 5 ஆண்டுகள் முடிந்ததும் தனக்கு அளிக்கப்பட்டிருந்த அலுவலக பணியாளர்களில் 14 பேரில் 12 பேரை, தொடர்ந்து பணியில் வைத்து கொள்ள வேண்டுகோள் விடுத்தார். இதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம், நாங்கள் அப்படித்தான் இருந்தோம் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.