தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது அலுவல் ஏதுமின்றி இன்று ஒத்திவைப்பு
சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று சபையில் அலுவல்கள் ஏதுமின்றி மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பின் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் பட்ஜெட்டில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்காக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று முதல் மீண்டும் நடைபெறுகிறது.
இன்று காலை சபை கூடியவுடன் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ க்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தற்போதைய சட்டசபையில் எம்எல்ஏக்களாக இருந்து மறைந்த சூலூர் கனகராஜ், விக்கிரவாண்டி ராதாமணி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின் இன்றைய அவையில் வேறு அலுவல்கள் ஏதுமின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத் தொடர் ஜுலை 30- ந் தேதி வரை நடைபெறும் என்றும் தினமும் விவாதங்களும், கேள்வி நேரமும் இடம் பெறும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சட்டப் பேரவை ஒத்திவைக்கப்பட்ட பின் மீண்டும் வரும் திங்கட் கிழமை கூடுகிறது. அப்போது, சபாநாயகர் தனபால் மீதான திமுகவின் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இதனால் திங்கட்கிழமை சட்டப்பேரவையில் பரபரப்பான விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவுக்கு 123 எம்எல்ஏக்கள் பலம் இருப்பதால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடையும் என்பது உறுதியாகத் தெரிகிறது. ஆனாலும் இந்தக் கூட்டத்தொடரில் குடிநீர் பிரச்னை, தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த தோல்வி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை திமுக எழுப்பும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.