சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம்... பின் வாங்கியது திமுக
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது திமுக. இந்தத் தீர்மான த்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப் போவதில்லை என திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. மறைந்த எம்எல்ஏக்களான சூலூர் கனகராஜ், விக்கிரவாண்டி ராதாமணி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்று சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.
மீண்டும் வரும் ஜூலை 1-ந்தேதி திங்கட்கிழமை பேரவை கூடும் போது, சபாநாயகருக்கு எதிராக திமுக கொடுத்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தீர்மானத்தை வலியுறுத்தப் போவதில்லை என்று திமுக திடீரென பின் வாங்கியுள்ளது.
இன்று சட்டப் பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ள தேவையில்லை என்று சபாநாயகர் தனபாலிடம் கடிதம் கொடுத்துள்ளோம். அன்றைய சூழ்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கடிதம் கொடுத்திருந்தோம். இப்போதைக்கு அதை திமுக வலியுறுத்தப் போவதில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.