வீடியோ கான்பரன்ஸ் மூலம் கிராமசபை கூட்டம்... ஹைடெக் பாணியில் கமல் அசத்தல்

கிராமசபைக் கூட்டங்களில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பொது மக்களைத் தொடர்பு கொண்டு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் ஆலோசனை வழங்கினார். ஹைடெக் பாணியில் பல்வேறு கிராமத்தினரை திரை மூலம் கமல் தொடர்பு கொண்டது வெகுவான பாராட்டுக்களை பெற்றுள்ளது.

வழக்கமாக மே 1-ந்தேதி தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இம்முறை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் நடத்தப்படவில்லை ° அதற்குப் பதிலாக இன்று கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது.

எங்கும் புதுமை... எதிலும் புதுமை... என்பது போல் திரைப்படம், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் புதுமை படைத்து வரும் கமல், இந்த கிராம சபைக் கூட்டங்களிலும் இன்று ஒரு புதுமைப் புரட்சி செய்து விட்டார். தனது மக்கள் நீதி மய்யம் கட்சியினரை கிராமங்களில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் தவறாது பங்கேற்குமாறு உத்தரவிட்டிருந்தார் கமல். அதன்படி பெரும்பாலான ஊர்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் மக்களோடு மக்களாக பங்கேற்றனர்.

கமலஹாசனோ சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஹைடெக் பாணியில் ஒரு ஏற்பாடு செய்திருந்தார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஊடக செய்தியாளர்கள் பலருடன் சேர்ந்து டெலிகான்பரன்ஸ் (காணொளி) மூலம் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்றவர்களை கமல் தொடர்பு கொண்டு பேசினார். கிராம சபைக் கூட்டம் கூடி விட்டதா? அதிகாரிகள் வந்தார்களா? என்றெல்லாம் விசாரித்த கமல், கிராமசபைக் கூட்டத்தில் என்னென்ன பிரச்னைகள் குறித்து விவாதிக்கலாம்? தீர்மானங்கள் என்னென்ன போட வேண்டும் என்றெல்லாம் பொதுமக்களுக்கு விரிவாக ஆலோசனை கூறினார்.

மேலும் உங்கள் ஊரில் முக்கியமான பிரச்னைகள் என்ன? அதற்கு தீர்வு காண்பது எப்படி? என்பது பற்றியும் எடுத்துரைத்தார் கமலஹாசன். பலரும் டாஸ்மாக் கடையால் தான் பெரும் தொல்லை என்று ஆவேசமாக குரல் கொடுக்க, எங்கள் ஊருக்கு டாஸ்மாக் கடை வேண்டாம் என்று அழுத்தம் திருத்தமாக தீர்மானம் போடுங்கள். அப்புறம் அந்தக் கடையே உங்கள் ஊரில் இருக்காது. கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்திற்கு அவ்வளவு பவர் உள்ளது என்றெல்லாம் கூறி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கமல் ஆலோசனைகளை வாரி வழங்கினார்.

இப்படி புதுமையான முறையில், டெலிகான் பரன்ஸ் மூலம் பல்வேறு கிராமசபை கூட்டடத்தில் பங்கேற்றவர்களை கமல் தொடர்பு கொண்டநல்ல ரெஸ்பான்ஸ் என்றே கூறலாம். இதனால் கமலுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றனர்.

More News >>