மொபைல் ஆப், இணையதளத்தின் பெயரை மாற்றிய கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் மய்யம் என்ற தனது இணையத்தளத்தை ‘நாளை நமதே’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளார்.
தனது ரசிகர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை அறிந்து கொள்ளும் விதமாகவும் நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு இறுதியில் மய்யம் என்ற பெயரில் மொபைல் செயலி மற்றும் இணையதளத்தை அவர் தொடங்கினார்.
மேலும், நடிகர் கமல்ஹாசன் வருகின்ற 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அவரது கட்சிப் பெயரை அறிவித்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து “நாளை நமதே” என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
அதற்கான பணிகளில் கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வருகின்றனர். ராமநாதபுரத்தில் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கட்சி பெயரை அறிவிக்கிறார் என்றும் கொடி, சின்னத்தையும், தனது கட்சியின் கொள்கை திட்டங்களையும் அவர் விளக்கி பேசுகிறார் என்று தெரிகிறது.
இந்நிலையில், தற்போது மய்யம் என்ற பெயரில் இருந்த இணையதளம் நாளை நமதே என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. www.naalainamadhe.maiam.com என்ற புதிய இணையதளத்தில் கல்வி, தொழில், சுற்றுச்சூழல், வேளாண்மை, நீர் மேலாண்மை, நிதி உள்ளிட்ட துறைகளில் கருத்துகள், மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.