அமமுகவை கட்சியாக பதிவு செய்ய விண்ணப்பம் .. ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் யாருக்கும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் இரு அணிகளாக பிளவு ஏற்பட்டது.திடீரென சசிகலா வகையறாக்களை கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணியை இணைத்து மீண்டும் ஒரே அதிமுக என அறிவித்தனர். தினகரன் தலைமையில் அமமுக கட்சி உருவானது. இந்த இணைப்பை ஏற்காத ஒரு தரப்பின் தினகரன் பின்னால் இந்தக் கட்சியின் அணிவகுத்தனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன், குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றதால் தினகரனுக்கு மவுசு அதிகரித்தது. இதனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தினகரன் தொடங்கினார். ஆனால் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. இதனால் தற்போது நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் முறையீடு செய்தும், குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் பிடிவாதமாக மறுத்து விட்டது. அதற்கு தேர்தல் ஆணையம் கூறிய காரணம், அமமுக கட்சியை இன்னும் பதிவு செய்யவில்லை என்பதுதான்.

இதனால் கட்சியை பதிவு செய்வதாக நீதிமன்றத்தில் உத்தரவாதம் கொடுத்த தினகரன், அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு பொதுவான ஒரு சின்னம் கேட்டு, கடைசியில் போராடி பரிசுப் பெட்டகம் சின்னத்தை பெற்றனர்.

அமமுகவினர் பரிசுப் பெட்டகம் சின்னத்தை படு ஸ்பீடாக மக்களிடம் விளம்பரப்படுத்தினாலும் அச்சின்னம் தேர்தலில் கை கொடுக்கவில்லை. ஓட்டு எந்திரத்தில் சின்னத்தை அடையாளம் கண்டுபிடிப்பதே சிரமமாகிவிட்டது என்று அக்கட்சியினரே புலம்பினர்.இந்நிலையில் தான் தேர்தல் முடிந்தவுடன் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி பொதுச் செயலாளராக தினகரன் தேர்வு செய்யப்பட்டதுடன், தேர்தல் ஆணையத்திலும் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்தனர்.

இதையடுத்து தேர்தல் ஆணையம் தரப்பில் அமமுக கட்சியை பதிவு செய்வது தொடர்பாக நாளிதழ்களில் ஒரு விளம்பரம் செய்துள்ளது. அதில், அமமுக என்ற பெயரில் ஒரு புதிய கட்சி பதிவு செய்ய விண்ணப்பம் வந்துள்ளது. இந்தக் கட்சியின் தலைவர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்றும்,கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்றும் பொருளாளர் அன்பழகன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கட்சியை பதிவு செய்யப்படுவது தொடர்பாக ஏதாவது ஆட்சேபனை இருந்தால் தேர்தல் ஆணைய மின்னஞசலுக்கு அனுப்பலாம் என்று அந்த விளம்பாத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>