புனேயில் நள்ளிரவில் சோகம்... கனமழையால் சுவர் இடிந்து 15 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் கனமழை காரணமாக காம்பவுன்ட் சுவர் இடிந்ததில், தூங்கிக் கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் 15 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
புனேயில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்த கனமழையால் புனே நகரின் கோந்த்வா பகுதியில் உள்ள குடியிருப்பின் உயரமான காம்பவுண்ட் சுவர் நள்ளிரவில் இடிந்து விழுந்தது.
இதில் காம்பவுண்ட் சுவரை ஒட்டி தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியிருந்த 15 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். ஏராளமான வாகனங்களும் சேதமடைந்தன.
உயிரிழந்த தொழிலாளர்கள் அனைவரும் ஒடிசா மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் சுவர் இடிந்து விபத்து நடந்த இடத்தின் அருகே நடைபெறும் கட்டுமானப் பணிக்காக அழைத்து வரப்பட்டு, தற்காலிக கூடாரம் அமைத்து தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினரும், தீயணைப்பு படையினரும் மீட்டனர்.
போதிய பாதுகாப்பு இன்றி தொழிலாளர்களை தற்காலிக கூடாரம் அமைத்து தங்க வைத்ததே, இந்த உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று புனே மாவட்ட ஆட்சியர் நவல் கிஷோர் ராம் தெரிவித்துள்ளார்.
அரபிக் கடலில் ‘வாயு’ புயல் கேரளாவில் மழை கொட்டும்