வாய் துர்நாற்றத்திற்கு தீர்வுதான் என்ன?
வாயிலிருந்து எழும் விரும்பத்தகாத நாற்றம் குழுவில் பேசி பழக பெருத்த தடையாக அமைந்து விடுகிறது. அலுவலகம், விழாக்கள், கூடுகைகளில் யாரிடமும் கருத்துகளை பரிமாறிக்கொள்ள இயலாத நிலையில் தவித்துப்போய்விடுவோம். அதிக மனஅழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய இக்குறைபாட்டின் பின்னே பல உடல்நல கேடுகளும் இருக்கக்கூடும். ஆகவே, துர்நாற்றத்தினால் ஒதுங்கி இருப்பதைக் காட்டிலும் அதற்கு தகுந்த சிகிச்சை அளிப்பதே முக்கியம்.
'ஹலிடோசிஸ்' என்று அழைக்கப்படும் வாய் துர்நாற்றத்திற்கு கந்தகம் (சல்பர்) மற்றும் கீட்டோன் மூலக்கூறுகள் காரணமாகின்றன. சிலருக்கு சாப்பிடும் உணவு காரணமாக, வேறு சிலருக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் காரணமாக வாயில் துர்நாற்றம் எழுகிறது. செரிமான மண்டலம், குடல் மற்றும் சிறுநீர் பிரிக்கும் உறுப்புகள் ஆகியவற்றின் செயல்பாட்டில் ஏற்படும் கோளாறுகளின் காரணமாகக் கூட வாயில் துர்நாற்றம் பிறக்கும். இரவில் வாயில் தங்கும் உணவு துணுக்குகள் பாக்டீரியாக்களாக மாறி துர்நாற்றத்தை உருவாக்குகின்றன.
வாயை அலசக்கூடிய திரவம் (Mouth rinses), இதற்கான தெளிப்பான்கள் (mouth sprays) மற்றும் சூயிங்கம் ஆகியவை தற்காலிகமாக துர்நாற்றத்தை தடுக்கும்.
பல் அரிப்பு, ஈறுகளில் ஏற்படும் நோய் ஆகியவற்றுக்கு உரிய சிகிச்சை பெறுவதன் மூலம் துர்நாற்றத்தைப் போக்கலாம்.
பல் துலக்க பயன்படும் பிரஷ் மற்றும் பேஸ்ட் ஆகியவற்றை கவனமாக தேர்வு செய்யவேண்டும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரை சந்தித்து பற்களை சுத்தப்படுத்துதல் (scaling and polishing)ஏற்றது.
பல் துலக்கும்போது நாக்கினை சுத்தப்படுத்துவதும் அவசியம். பற்களை மெதுவாக துலக்கவேண்டும். வேகமாக துலக்குவதால் ஈறுகள் காயப்பட்டு துர்நாற்றத்திற்குக் காரணமாகலாம்.
நீரிழிவும் வாய் துர்நாற்றத்திற்குக் காரணமாகலாம். சிலவேளைகளில் தொடர் துர்நாற்றத்தின் பின்னே புற்றுநோயும் இருக்கக்கூடும். ஆகவே, மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது.