காஞ்சியில் அத்திவரதர் தரிசனம் கோலாகலமாக தொடங்குகிறது

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனம் நாளை(ஜூலை1) முதல் தொடங்குகிறது. 48 நாள் அத்திவரதர் பெருவிழா கோலாகலமாக தொடங்குகிறது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்து சுவாமி அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து, பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படுவார். இது அத்திவரதர் பெரு விழா என்று 48 நாட்கள் நடைபெறும், காஞ்சிபுரம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள்.

இந்தாண்டு அத்திவரதர் திருவிழா நாளை (ஜூலை 1) தொடங்கி ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 27 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அத்திவரதரை எடுக்கும் பணி துவங்கி, அதிகாலை சுமார் 3 மணிக்கு அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டார். பின், வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்ட அத்திவரதருக்கு தைலக்காப்பு செய்யப்பட்டது. திருமஞ்சனம் செய்யப்பட்ட அத்திவரதரை ஜூலை 1 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை காலை 6 மணிக்கு அத்திவரதர் தரிசனம் தொடங்குகிறது. 48 நாட்களில் 30நாட்கள் அத்திவரதர் சயன நிலையிலும் 18 நாட்கள் நின்ற நிலையிலும் காட்சி அளிக்க இருக்கிறார். இதையொட்டி காஞ்சிபுரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏராளமான சிறப்பு பஸ்களும் விடப்பட்டுள்ளன.

More News >>