கடைசி ஓவர் வரை தில் காட்டிய ஆப்கன்... கண்டம் தப்பியது பாக்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி வரை கதறவிட்ட ஆப்கானிஸ்தான் மயிரிழையில் வெற்றியை பரிதாபமாக கோட்டை விட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக அரையிறுதி வாய்ப்பில் பாகிஸ்தான் இன்னும் நீடிக்கிறது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடையும் தருவாய்க்கு வந்துள்ளன. முன்னணியில் உள்ள அணிகள் முதலிடத்துக்கு முன்னேற முனைப்புக் காட்ட, தோல்வி மேல் தோல்வி பெற்று துவண்டுள்ள அணிகள் ஆறுதலுக்கு ஓரிரு வெற்றிகளையாவது பெற்றுவிட மாட்டோமா? என வீராப்புக் காட்ட, கடைசிக் கட்ட போட்டிகளில் தினமும் திக்.. திக்.. காட்சிகள் அரங்கேற ஆரம்பித்துள்ளன. இதனால் கிரிக்கெட் ரசிகர்களிடையேயும் ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
இந்நிலையில் லீட்ஸ்சில் நேற்று நடந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டியில் கடைசி வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் த்ரில்லை ஏற்படுத்திவிட்டது. இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலையில் ஆப்கனை எளிதில் வென்று விடலாம் என தப்புக்கணக்கு போட்டது பாகிஸ்தான். ஆனால் விட்டேனா பார் என்று ஆப்கான் வீரர்கள் வீராப்புக் காட்ட போட்டியில் வெற்றி யாருக்கு என்பது கடைசி வரை கேள்விக்குறியாகி விட்டது என்றே கூறலாம்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கன் முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் வீரர்களின் ஆக்ரோஷ பந்துவீச்சில் திணறல் ஆட்டம் ஆடிய ஆப்கன் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் மட்டுமே எடுத்தது.ஜத்ரன் (42), அஸ்கர் (42) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு ரன் சேர்த்தனர் எனலாம்.
வெற்றிக்கு 238 ரன்கள் தானே என்று ஆப்கனை எளிதாக நினைத்த பாகிஸ்தானுக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.முஜீப் வீசிய முதல் ஓவரின் 2-வது பந்தில் பகர் ஜமான் டக் அவுட்டானார். பின்னர் சுதாரித்த பாக்.வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஆப்கன் வீரர்கள் தங்கள் போர்க் குணத்தை கைவிட வில்லை. சீரான இடைவெளியில் இமாம் (36), பாபர் (45), ஹபீஸ் (19), ஹாரிஸ் (27), கேப்டன் சர்பராஸ் (18) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, பாகிஸ்தான் திணறித்தான் போய் விட்டது. இதனால் ஒரு கட்டத்தில் ஆப்கன் வெற்றி பெற்று விடும் என்ற நிலை கூட உருவானது.
ஆனால் கடைசிக் கட்டத்தில் பாகிஸ்தானின் இமாத்வாசிம் (49) அதிரடி காட்ட 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் 49.4 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்று கண்டம் தப்பியது பாகிஸ்தான் என்றே கூறலாம்.
இந்த வெற்றியின் மூலம் 9 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு பாகிஸ்தான் முன்னேறினாலும் அரையிறுதி வாய்ப்பு என்பது அந்த அணிக்கு இன்னும் சவாலாகவே உள்ளது. எஞ்சியுள்ள ஒரு ஆட்டத்தில் வங்கதேசத்தை வென்றால் மட்டுமே பாக்.அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிட்டும். அதுவும் இங்கிலாந்து அணி, அடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடனான ஆட்டத்தில் ஏதேனும் ஒரு போட்டியில் தோற்றால் மட்டுமே அந்த வாய்ப்பு என்ற நிலையல் பாகிஸ்தான். இருந்தாலும் 4 -வது இடம் யாருக்கு என்பதில் இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையே இன்னமும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது என்றே கூறலாம்.