ஒரு துளி தண்ணீரைக் கூட வீணாக்காதீர்...!

ஒவ்வொரு வாரமும் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சியை மீண்டும் தொடங்கியுள்ளார். இன்று அவர் தமது உரையில் தண்ணீர் சிக்கனம், சேமிப்பு குறித்து முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார்.

கடந்த 2014-ம் ஆண்டில் முதல்முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்றவுடன் மன் கீ பாத் என்ற மக்களுடன் வாரந்தோறும் உரையாடும் புதுமையான நிகழ்ச்சியை தொடங்கினார். சுமார் 4 1/2 ஆண்டு காலம் வாரம் அகில இந்திய வானொலியில் வாரம் தவறாமல் உரை நிகழ்த்தி, முக்கியப் பிரச்னைகள் குறித்து தமது கருத்துக்களை எடுத்துரைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

பொதுத் தேர்தல் நெருங்கியதால் இந்தாண்டு பிப்ரவரி மாதம் வானொலியில் இந்த மன் கீ பாத் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

இந்நிலையில் 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற மோடி, மீண்டும் மன் கீ பாத் நிகழ்ச்சி தொடரும் என கடந்த 15-ந் தேதி டுவீட் செய்து அறிவித்திருந்தார். அதன்படி இந்த முறை பதவியேற்று சரியாக ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு மன் கீ பாத் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தினார்.

தமது உரையில், நாட்டில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பேசினார். இந்த நேரத்தில் தண்ணீர் சிக்கனம் அவசியம் என்ற பிரதமர் மோடி, கிடைக்கும் ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க வேண்டியது அவசியம் என்றார். முன்னோர்கள் கோயில்களைக் கட்டி அதன் அருகில் குளங்களை அமைத்து தண்ணீரை சேமித்ததை எடுத்துக் கூறிய பிரதமர் மோடி, நாமும் அதுபோல் பின்பற்ற வேண்டும் என்றார்.

பிரதமர் மோடியின் மன் கீ பாத் உரையை பொதுமக்கள் ஓரிடத்தில் அமர்ந்து கேட்டும் வகையில் நாடு முழுவதும் மத்திய அரசு சார்பிலும், பாஜக சார்பிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உ.பி.மாநிலம் துவாரகாவில் பிரம்மாண்ட விளையாட்டு மைதானத்தில் பல ஆயிரம் பொதுமக்களுடன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் மோடியின் உரையை கேட்டனர்.

More News >>