ரூ 3000 கோடியில் அமைக்கப்பட்ட படேல் சிலையில் மழைக்கசிவா? - பரபரப்பு தகவல்கள்

குஜராத்தில் 8 மாதங்களுக்கு முன்பு ரூ 3000 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் சிலையில் மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்களால் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவர் சர்தார் வல்லபாய் படேல். நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தீவிரமாக பங்கேற்றவர். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடன், இந்தியாவில் சிதறிக் கிடந்த சிறு,சிறு சாம்ராஜ்யங்களை ஒன்று சேர்த்து ஒரே இந்தியா என்ற நிலையை உருவாக்கியவர். அப்போது இந்தியாவுடன் இணைய மறுத்த சில மன்னர்கள் மீது படேல் காட்டிய கடுமை இன்றும் பேசப்படும் ஒன்றாகும். இதனாலேயே இரும்பு மனிதர் என்ற பட்டம் அவருக்கு கிடைத்தது.

நேரு பிரதமராகி, அதன் பின் நேருவின் பரம்பரையே காங்கிரசில் கோலோச்சியதால் படேலின் புகழை மழுங்கடிக்கச் செய்யப்பட்டுவிட்டது என புகார் வாசித்த பிரதமர் மோடி, படேலுக்கு குஜராத்தில் பிரம்மாண்ட சிலை ஒன்றை அமைத்தார். நர்மதை ஆற்றின் கரையில் சர்தார் சரோவர் அணைக்கு அருகே 182 மீட்டர் உயரத்தில் ரூ 3000 கோடி செலவில் அமைக்கப்பட்ட படேலின் சிலையை கடந்த ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஒற்றுமை சிலை என்று பெயர் வைக்கப்பட்டுள்ள படேல் சிலையைக் காண சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத், மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இந்த ஒரு கனமழைக்கே தாங்க முடியாமல் சிலையின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கட்டுமானத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டு, தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இப்போது சர்ச்சையாகி உள்ளது. 3000 கோடி ரூபாயில் கட்டப்பட்ட சிலை, மழைக்கு தாங்காமல் கசிவு ஏற்பட்டதற்கு பல தரப்பிலும் விமர்சனங்தள் எழுந்து பரபரப்பாகி உள்ளது.

ஆனால் சிலை அமைக்கப்பட்ட பகுதிக்குள் மழைக் கசிவு ஏதும் இல்லை என்று சிலை பராமரிப்பு குழுவினர் மறுத்துள்ளனர். பலத்த காற்றுடன் கன மழை கொட்டுவதால், மழை நீர் உள்ளே புகுந்ததே காரணம் என்றும், சிலைக்குள் கசிவு ஏதும் இல்லை என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டாலும் சர்ச்சை நீடிக்கிறது.

More News >>