இந்தியாவுக்கு எதிரான சவாலான போட்டி... இங்கிலாந்து பேட்டிங்..! விஜய்சங்கருக்கு ஓய்வு- ரிஷப் பன்ட் உள்ளே
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான வாழ்வா? சாவா? என்ற சவாலான போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்து ஆடி வருகிறது. இந்திய அணியில் விஜய் சங்கருக்கு ஓய்வு தரப்பட்டு | அதிரடி இளம் வீரர் ரிஷப் பன்டுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளதால் அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிரடி காட்டுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காமில் நடைபெறும் இந்தப் போட்டியில் காவி நிற சீருடையுடன் இந்தியா களமிறங்குகிறது. இந்தப் போட்டியில் வென்றால் இந்தியா ஜம்மென அரையிறுதியில் நுழைய முடியம் என்பதால் காவி ராசியும் கை கொடுக்குமா? என்பது தெரிந்துவிடும்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா இதுவரை ஆடிய போட்டிகளில் தோல்வியே காணாமல் வெற்றிகளை ருசித்து வருகிறது. இதுவரை ஆடியுள்ள 6 போட்டிகளில் 5-ல் வெற்றி, ஒரு போட்டி மழையால் ரத்து என 11 புள்ளிகளுடன் பட்டியலில் 2-ம் இடம் வகிக்கிறது. இன்னும் 3 போட்டிகளில் ஆட உள்ள இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் போதும் அரையிறுதியை உறுதி செய்து விடலாம்.
இந்நிலையில் பர்மிங்காம் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கை முதலில் தேர்வு செய்ய அந்த அணி ஆடி வருகிறது. இந்திய அணியில், பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரிஷப் பான்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அதிரடி காட்டுவார் என்று நம்பலாம்.
இன்று போட்டி நடைபெறும் பர்மிங்காம் மைதானமும் இந்திய அணிக்கு ராசியானது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 7-ல் இந்தியா வெற்றியை ருசித்துள்ளது. அதில் இங்கிலாந்துக்கு எதிராக மட்டும் 4 போட்டிகளில் 3-ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளதும்,2013-க்குப் பின் இந்த மைதானத்தில் விளையாடிய 5 போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டி இத்தொடரை நடத்தும் இங்கிலாந்து அணிக்கு வாழ்வா? சாவா? என்ற அளவுக்கு அமைந்துள்ளது. இன்று தோற்றால் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என்பதால், இங்கிலாந்து வீரர்களும் வெற்றிக்கு போராடுவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.