இங்கிலாந்து காட்டடி தர்பார் ... இந்தியாவுக்கு இமாலய இலக்கு
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வாழ்வா? சாவா? என்ற நிலையில் இன்றைய போட்டியில் ஆடிய இங்கிலாந்து, இந்தியாவின் பந்து வீச்சை சிதறடித்து இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
பர்மிங்காமில் இரு அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் என்ற நெருக்கடியில் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராயும், பேர்ஸ்டோவும் முதல் 10 ஓவர்களில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 ரன்கள் எடுத்தனர். ஆனால் அடுத்து இந்திய சுழல்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ்,சகால் ஆகியோரின் பந்துகளை காட்டடி அடித்து, சிக்சர், பவுண்டரிகளாக விளாசி துவம்சம் செய்ய, இங்கிலாந்து அணியின் ரன் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இருவரும் 22.1 ஓவர்களில் 160 ரன் குவித்திருந்த போது குல்தீப் பந்தில் 66 ரன்கள் எடுத்திருந்த ஜேசன் ராய் அவுட்டானார். இதன் பின் பேர்ஸ்டோவுடன் ரூட் ஜோடி சேர, மீண்டும் ரன் வேட்டையை தொடர்ந்தனர். இந்த நேரத்தில் சமி பந்து வீச்சை தொடர இங்கிலாந்து அணியின் வேகம் சற்று மட்டுப்பட்டது. 6 சிக்சர் 10 பவுண்டரிகள் என 109 பந்துகளில் 111 ரன்களை குவித்து அபார சதம் அடித்த நிலையில் பேர்ஸ்டோவை ஷமி அவுட்டாக்க, இங்கிலாந்தின் ரன் ரேட் குறைய ஆரம்பித்தது. அடுத்து வந்த இங்கிலாந்து கேப்டன் மோர்கனும் சமி வேகத்தில் ஒரு ரன்னில் வீழ்ந்தார்.
ஆனால் அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் அதிரடி யைத் தொடர இங்கிலாந்து அணியின் ரன் வேகம் மீண்டும் கிடுகிடுவென உயர்ந்தது. ஸ்டோக்ஸ் 54 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அவுட்டாக, 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன்களை குவித்தது இங்கிலாந்து .
இந்திய பந்து வீச்சாளர்கள் இன்று ரன்களை வாரி வழங்கினர் என்றே கூறலாம். சமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் 69 ரன்களை விட்டுக் கொடுத்தார். சகால் (88), குல்தீப் (72) ஆகியோரும் தாராளம் காட்டினர் என்றே கூறலாம். இதனால் 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி வெற்றி பெற முடியுமா? என்ற நிலையில் இந்தியா ஆடி வருகிறது...