பலிக்காமல் போன பாகிஸ்தான் பிரார்த்தனை... இந்திய காவிப்படை இங்கிலாந்திடம் தோற்றது
உலகக்கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்தை இந்தியா வெல்ல வேண்டும் என பாகிஸ்தானியர்கள் பிரார்த்தனை செய்தும் பலனில்லாமல் போய்விட்டது. இந்தத் தொடரில் முதல்முறையாக காவி நிற சீருடையுடன் களமிறங்கிய இந்திய அணி, முதல் முறையாக தோல்வியையும் தழுவி இந்திய ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - இங்கிலாந்து இடையே பர்மிங்காமில் நேற்று நடந்த போட்டி, மிக முக்கியமான போட்டியாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது எனலாம். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் இங்கிலாந்து ஆடியது. ஆனால் இந்தியா தான் வெற்றி பெற வேண்டும் என்று இந்திய ரசிகர்களையும் தாண்டி விநோதமாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்து கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் பிரார்த்தனையே செய்தனர். இதற்குக் காரணம், இங்கிலாந்தை இந்தியா வென்றால் மட்டுமே அந்த இரு நாடுகளின் அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு நீடிக்கும் என்பது தான்.
இந்தப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப் படுத்தினர். தொடக்க ஆட்டக்கார்கள் ஜேசன் ராய் (60), பேர்ஸ்டோவ் (111) இருவரும் மளமளவென ரன்களைக் குவித்து இங்கிலாந்துக்கு நம்பிக்கை அளித்தனர். இங்கிலாந்தின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறி விட்டனர் என்றே கூறலாம். கடைசி நேரத்தில் ஸ்டோக்ஸ் (79) இந்திய பந்து வீச்சை சிதறடிக்க இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 337 ரன்களைக் குவித்தது. இந்தியத் தரப்பில் ஷமி மட்டுமே 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தாலும், அவர் 10 ஓவர்களில் 69 ரன்களை வாரிக் கொடுத்திருந்தார்.
338 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 9 பந்துகளை வீணடித்து ரன் எதுவும் எடுக்காமல் லோகேஷ் ராகுல் டக் அவுட்டானார். அதன் பின் ரோகித் - கோஹ்லி ஜோடி ஓரளவுக்கு நம்பிக்கை அளித்தாலும் ரன் வேகத்தை அதிகரிக்கத் தவறினர். 76 பந்துகளில் 66 ரன் எடுத்து, இந்தத் தொடரில் தொடர்ச்சியாக 5-வது அரைசதம் அடித்த சாதனையுடன் கோஹ்லி பெவிலியன் திரும்பினார். அடுத்து இந்தத் தொடரில் 3-வது சதம் அடித்த திருப்தியுடன் 109 பந்துகளில் 102 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மா பெவிலியன் திரும்ப, தேவைப்படும் ரன்ரேட் ஓவருக்கு 10-க்கு மேல் என்று எகிறி இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது.
இந்நிலையில் இளம் அதிரடி வீரர்களான பாண்ட்யாவும், ரிஷப் பாண்டும் சாதிப்பார்கள் என்று எதிர்பார்த்தால், இருவரும் சாதிக்கத் தவறினர். கடைசிக் கட்டத்தில் 5 ஓவர்களில் 70 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அப்போது ஆடிக்கொண்டிருந்த தோனி ஏதேனும் அதிசயம் நிகழ்த்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க அதுவும் நடக்காமல் போய்விட்டது.
கடைசியில் இந்தியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பு 306 ரன்கள் மட்டுமே சேர்த்து 31 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்துக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளது. கடைசியாக நியூசிலாந்துடன் மோதும் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலை இன்னும் நீடிக்கிறது. அதே வேளையில் நியூசிலாந்திடம் இங்கிலாந்து தோற்கும் பட்சத்தில், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இரு அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது என்பதே தற்போதைய நிலவரம்.
இந்தப் போட்டியில் இந்தியா ஜெயிக்க வேண்டும் என பாகிஸ்தான், வங்கதேச வீரர்களும் ரசிகர்களும் பிரார்த்தனையே செய்தனர். ஆனால் பிரார்த்தனைக்கு பலனில்லாமல் போய்விட்டது. அதே போல் இந்தப் போட்டியில் காவி நிற சீருடையில் இந்திய வீரர்கள் ஆடியதும் தோல்விக்கு காரணம் என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு சர்ச்சையை அதிகரித்துள்ளனர். காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தியும், இந்தியாவின் தோல்விக்கு காவி சீருடை காரணம் என்று விளாசியுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் ; இந்திய வீரர்கள் சீருடையில் மாற்றம்