தண்ணீர் பிரச்னை சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்..! மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்க சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில், தண்ணீர் பிரச்னை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறுகையில், சென்னைக்கு குடிநீர் ஆதாரமான 4 ஏரிகளும் வறண்டு விட்டன. 2020-ம் ஆண்டில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் என நிதி ஆயோக் கூறியிருந்தது. ஆனால் ஒரு வருடத்துக்கு முன்னதாகவே குடிநீர் பஞ்சம் வந்துவிட்டது. சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தற்காலிக தீர்வாக, ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் தண்ணீர் கொண்டு வருவதும், கூடுதல் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுவதும் வரவேற்கத்தக்கது.

ஆனால் தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு குடிமராமத்துப்பணிகளை அரசு முறையாக செய்யாததும் காரணம்.இதனால் தண்ணீர்ப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். எனவே தண்ணீர்ப் பிரச்னை குறித்து, சட்டப்பேரவையின் ஒரு நாள் சிறப்புக் கூட்டத்தை நடத்தி விவாதிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மு.க.ஸ்டாலின் பேசியதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தண்ணீர் பிரச்னையை தமிழக அரசு உரிய முறையில் கையாள்வதாகத் தெரிவித்தார்.

குடிக்க தண்ணீர் எங்கே..? காலிக்குடங்களுடன் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
More News >>