கூகுளின் குரோமுக்கு போட்டி வந்தாச்சு: பிரேவ்
ஃபயர்பாக்ஸ் உடன் நிறுவனரும் ஜாவாஸ்கிரிப்ட்டை உருவாக்கியவருமான பிரண்டன் ஐச், பிரேப் (Brave) என்ற பிரௌசரை வடிவமைத்துள்ளார். இது மூன்றாம் நபர் விளம்பரங்கள், பயனர்களின் தரவுகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்கிறது. பயனரின் அனுமதியின்றி வெளி நபர் யாரும் அவரது தரவுகளை அறிந்திடாமல் 'பிரேவ்' பாதுகாக்கிறது.
ஐஓஎஸ் தளத்திற்கான 'பிரேவ்' பிரௌசர் 2018ம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. தற்போது ஆண்ட்ராய்டு, மேக், விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆகிய இயங்குதளங்களுக்கான 'பிரேவ்' பிரௌசர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
பிரேவ் பிரௌசர், குரோம் பிரௌசரை காட்டிலும் மேசை கணினியில் இரு மடங்கு வேகத்திலும் மொபைல் போன்களில் எட்டு மடங்கு வேகத்திலும் செயல்படும் என்று கூறப்படுகிறது. தனியுரிமை அமைப்பில் மாற்றம் செய்வதன் மூலம் பயனர் பார்க்கும் இணையதளங்களின் விவரங்களை பிரேவ் பிரௌசர் பார்க்காமல் மற்றும் பாதுகாக்காமல் அதாவது சேகரிக்காமல் செய்யலாம். தினமும் எத்தனை விளம்பரங்கள் மற்றும் கண்காணிப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தையும் பயனருக்கு 'பிரேவ்' அளிக்கும். பயனரின் செயல்பாடுகளை யாரும் கண்காணிக்காதவண்ணமும், விளம்பரங்கள் குறுக்கிடாத இனிய இணைய அனுபவத்தை பயனர் பெற்றுக்கொள்ளும்படியாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது உலகமெங்கும் 2 கோடி பயனர்கள் கூகுளின் குரோம் பிரௌசரை பயன்படுத்தி வருகின்றனர். வேகம், பாதுகாப்பு மற்றும் துரித கண்டடைதல் ஆகிய காரணிகளின்படி, சிறந்த பிரௌசர்கள் பட்டியலில் மோஸில்லா ஃபயர்பாக்ஸுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை 'பிரேவ்' பிடித்துள்ளது. ஆப்பிளின் ஸபாரி மற்றும் கூகுளின் குரோம் ஆகியவை முறையே மூன்றாம், நான்காம் இடங்களில் உள்ளன.
வருமானத்தில் 70 விழுக்காட்டை விளம்பரங்களை கொடுக்கும் மற்றும் பார்க்கும் பயனர்களுக்கு கொடுத்துவிட்டு, பிரௌசரை வடிவமைத்த நிறுவனத்திற்கு 30 விழுக்காட்டை அளிக்க இருப்பதாகவும் 'பிரேவ்' அறிவித்துள்ளது.