தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும்..! ராகுல்காந்தியிடம் காங்.முதல்வர்கள் கெஞ்சல்
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், ராகுல் காந்தியை இன்று சந்தித்தனர். 2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் கட்சியின் தலைவர் பதவியில் ராகுல் காந்தியே நீடிக்க வேண்டும் என்று அவரை சமாதானம் செய்து வலியுறுத்தியுள்ளனர்.
மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட படுதோல்வியால் துவண்டு போன ராகுல் காந்தி, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். வேறு ஒருவரை தலைவராக தேர்ந்தெடுங்கள் என்று கட்சியின் மூத்த தலைவர்களிடம் பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார். இதனை கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஏற்கவில்லை. ராகுல் காந்தியே தலைவராக நீடிக்க வேண்டும் என ஒட்டு மொத்த காங்கிரசாரும் வலியுறுத்தினாலும், கடந்த 35 நாட்களாக ராகுல் காந்தி தனது முடிவில் பிடிவாதமாக உள்ளார். மேலும் குறிப்பிட்ட சில தலைவர்களைத் தவிர்த்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார்.
குறிப்பாக காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வியால் அம்மாநிலங்களின் முதல்வர்கள் மீது கடும் அதிருப்தியில் இருந்தார் ராகுல் காந்தி. இதனால் அந்த மாநிலங்களின் முதல்வர்கள் ராகுல் காந்தியை சந்திக்க பல முறை முயற்சித்தும் பிடிவாதமாக மறுப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் ஒரு வழியாக இன்று சந்திப்பு நடந்தேறியது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் இன்று மாலை ராகுல் காந்தியை அவருடைய இல்லத்தில் சந்தித்தனர்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பில், தலைவர் பதவியில் ராகுல் காந்தியே நீடிக்க வேண்டும் என்பதை 5 மாநிலங்களின் முதல்வர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சந்திப்புக்குப் பின் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ராகுல் காந்தியுடனான சந்திப்பு திருப்தியாக இருந்தது. நாங்கள் கூறியதை கவனமாக கேட்டறிந்தார். இக்கட்டான இந்த நேரத்தில் கட்சியின் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினோம். கட்சியில் ராகுல் காந்தி எடுக்கும் எந்த முடிவுக்கும் ஒட்டு மொத்த காங்கிரசாரும் ஒத்துழைப்போம், கட்டுப்படுவோம் என்பதை உறுதிபடத் தெரிவித்தோம்.
பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு, மக்களை திசை திருப்பி பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டது. நாட்டுப்பற்று என்று கூறி ராணுவத்தையும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினர். மதவாதத்தைப் பற்றியே அக்கறை கொள்ளும் பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சி, பொருளாதாரம் பற்றி சிறிது கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை. மோடியின் சூழ்ச்சிகளை முறியடிக்க காங்கிரசின் தலைவர் பதவியில் ராகுல் காந்தியே நீடிக்க வேண்டும். ராகுல் காந்தியிடம் எங்களது உணர்வுகளை தெரிவித்துள்ளோம். இதனால் தலைவர் பதவியில் நீடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று அசோக் கெலாட் தெரிவித்தார்.