தினகரன் கூடாரத்தில் மேலும் ஒரு முக்கிய விக்கெட் காலி.? இசக்கி சுப்பையா அதிமுகவில் இணைகிறார்
டிடிவி தினகரன் கட்சியிலிருந்து முக்கியப் புள்ளிகள் ஓட்டம் பிடிப்பது தொடர்கதையாகிறது. அமமுகவில் முக்கிய நிர்வாகியாக இருக்கும் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவும் அதிமுக பக்கம் தாவ தயாராகி விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிடிவி தினகரன் தனிக் கட்சி தொடங்கிய போது அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் பலர் அவர் பின்னால் அணிவகுத்தனர்.ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, எப்படியும் அதிமுகவை கைப்பற்றி விடுவார் என்ற பெரும் நம்பிக்கையில் இருந்த பலர் பிடிவாதமாக கட்சியில் நீடித்தனர். 18 எம்எல்ஏக்கள் பதவி பறிபோனாலும் சரி என்ற நிலையில் தினகரன் பக்கம் கெத்தாக வலம் வந்தனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போன்ற ஒரு சிலர் மட்டுமே தினகரனை விட்டு பிரிந்தனர்.
ஆனால் கடந்த மக்களவை மற்றும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியால் அமமுகவின் உண்மையான பலம் என்னவென்று தெரிய ஆரம்பித்து விட்டது. இதனால் தினகரன் மீது நம்பிக்கை இழந்த முக்கியப் புள்ளிகள் பலர் அதிருப்தியடைய ஆரம்பித்தனர். இதனை மோப்பம் பிடித்த அதிமுகவும், திமுகவும் அவர்களை இழுக்க தீவிரம் காட்டின.
இதனால் தினகரனை விட்டு முக்கியப் புள்ளிகள் பலரும் ஓட்டம் பிடிக்கத் தொடங்கி விட்டனர். முதலில் நெல்லை மாவட்ட அமமுக நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவில் ஐக்கியமாகினர். அடுத்து திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, வட சென்னை பல்வேறு மாவட்டங்களின் நிர்வாகிகள் ஓட்டம் பிடித்தனர்.
கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க. தமிழ்ச்செல்வனின் விக்கெட்டை காலி செய்த திமுக, அவரை கட்சியில் இணைத்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் அமமுகவில் மற்றொரு முக்கிய நிர்வாகியான முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவும் அதிமுக பக்கம்தா வ தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாளை காலை குற்றாலத்தில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு இசக்கி சுப்பையா ஏற்பாடு செய்துள்ளார். அப்போது தினகரன் கட்சியில் இருந்து விலகும் முடிவை இசக்கி சுப்பையா அறிவிக்க உள்ளாராம். மேலும் வரும் சனிக்கிழமை தென்காசியில் பிரம்மாண்டமான விழா நடத்தி, தனது ஆதரவாளர்கள் 10 ஆயிரம் பேருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இசக்கி சுப்பையா இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2011-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரது அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் இசக்கி சுப்பையா.சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.